ஆந்திராவில் சோகம்... அதிர்ச்சியில் சந்திரபாபு நாயுடு - பாராட்டிய 3 நாட்களில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை!
Dinamaalai July 28, 2026 06:48 PM

ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சருடன் ஒரே மேடையில் அமர்ந்து உரையாடி பாராட்டு பெற்ற 10-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி, அடுத்த 3 நாட்களில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவைப் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம், பொலாவரம் மாவட்டம் ராம்பசோதாவரம் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் - ஆசிரியர் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 'முர்ரம் ஷிவானி' என்ற மாணவி மேடையில் நெகிழ்ச்சியாக உரையாற்றினார். தான் தீவிரமாகப் படித்து அடுத்த ஆண்டு ‘ஷைனிங் ஸ்டார்’ என்ற உயரிய விருதைப் பெற வேண்டும் என்பதைத் தனது இலக்காகப் பேசினார்.

மாணவியின் பேச்சைக் கேட்டு வியந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அவரை அழைத்துத் தன்னருகே மேடையில் அமரவைத்துச் சிறிது நேரம் உரையாடிப் பாராட்டினார். தொடர்ந்து, மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவும் அருந்தினார்.

முதல்வர் பாராட்டி சென்ற 3 நாட்களிலேயே, படிப்பில் சிறந்து விளங்கிய மாணவி முர்ரம் ஷிவானி தனது வீட்டில் எதிர்பாராதவிதமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உடனடியாகத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், மாணவியின் இந்த முடிவிற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி முழு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.