"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
ராகேஷ் தாரா July 28, 2026 07:44 PM

'மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்' மற்றும் 'நியோ கேசில் கிரியேஷன்ஸ்' இணைந்து தயாரித்துள்ள 'அன்பே டயானா' திரைப்படம் கடந்த ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பாரி இளவழகன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, சுதர்சன், செல் முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முதல் வாரத்தில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற அன்பே டயானா ஜன நாயகன் படத்தின் ரிலீஸால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனநாயகன் ரிலீஸான பின்பும் அன்பே டயானா படத்திற்கு திரையரங்குகளில் வரவேற்பு சிறப்பாக இருந்தது படத்தை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது. 

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படக்குழு சென்னைவில் நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்தி ஊடகங்களை சந்தித்தது. அப்போது பேசிய நடிகர் பரிதாபங்கள் கோபி, இயக்குநர் பாரி இளவழகனின் பயணத்தை மனதார பாராட்டினார்.

பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி

"இந்தப் படத்தின் வெற்றிக்கு முழு பாராட்டும் இயக்குநர் பாரி இளவழகனுக்கே சேர வேண்டும். அவர் எழுதிய கதையையும், உருவாக்கிய கதாபாத்திரத்தையும் அவர் சொன்னபடி திரையில் வெளிப்படுத்த முயன்றேன். இந்தப் படத்தின் ஆன்மா முழுவதும் அவருடைய எழுத்தும், இயக்கமும்தான்," என்று கோபி கூறினார்.

மேலும், "யூடியூப் போன்ற தளங்களில் இருந்து நேரடியாக சினிமாவுக்கு வருவது எளிதான பயணம் அல்ல. அதைவிட இயக்குநராக தன்னை நிரூபிப்பது இன்னும் பெரிய சவால். அந்த சவாலை முழு அர்ப்பணிப்புடனும், சினிமா மீதான காதலுடனும் எதிர்கொண்டு இன்று வெற்றி பெற்றிருக்கும் பாரி இளவழகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்," என்று பாராட்டினார்.

இந்தப் படத்தின் மூலம் சினிமாவை அணுகும் விதம், கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்ளும் முறை உள்ளிட்ட பல விஷயங்களை தானும் கற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு நடிகராக இந்த அனுபவம் தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கூறிய கோபி, நல்ல கதைகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இறுதியாக, தயாரிப்பாளர்கள், இயக்குநர், படக்குழுவினர், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை பரிதாபங்கள் கோபி தெரிவித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.