இந்தியா ஜிம்பாபே டி20 தொடர் 2026
இந்தியா தொடரை அநாயசமாக வென்றதுமுனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இந்திய அணி ஜிம்பாபேயில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு டி20 தொடரை விளையாடியது. மூன்று ஆட்டங்களும் ஹராரேயில் நடந்தது. முதல் ஆட்டம் ஜூலை 23இலும் இரண்டாவது ஆட்டம் ஜூலை 25லும் மூன்றாவது ஆட்டம் ஜூலை 26இலும் நடந்தது. மூன்று ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை மிகச் சுலபமாகக் கைப்பற்றியது.
முதல் ஆட்டத்தில் முதலில் ஆடிய ஜிம்பாபே அணி 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 125 ரன் எடுத்தது. இந்திய அணியின் புதிய பந்துவீச்சாளர்கள் மயாங்க் யாதவ், அஷோக் ஷர்மா, பிரின்ஸ் யாதவ், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். பின்னர் இரண்டாவதாக ஆடிய இந்திய அணி 13.2 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 126 ரன் எடுத்து வெற்றிபெற்றது. வைபவ் சூர்யவன்ஷி (19 பந்துகளில் 50 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்), இஷான் கிஷன் (24 பந்துகளில் 35 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (24 பந்துகளில் 28 ரன்) சிறப்பாக ஆடினர். மாயாங்க் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி முதலில் மட்டையாடியது. தொடக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி (20 ரன்) மற்றும் அபிஷேக் ஷர்மா (8 ரன்) விரைவில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் இஷான் கிஷன் சிறப்பாக ஆடினார். அவர் 44 பந்துகளில், 9 ஃபோர், 2 சிக்சர்களுடன் 81 ரன் அடித்தார். அவருடன் இணைந்து ஷ்ரேயாஸ் ஐயர் (20 பந்துகளில் 25 ரன்), திலக் வர்மா (29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ரன்), ரிங்கு சிங் (8 பந்துகளில் 12 ரன்), ஷிவம் துபே (6 ரன்) ஆகியோரும் சிறப்பாக ஆடி, இந்திய அணிக்கு 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 219 ரன் சேர்த்தனர்.
இரண்டாவதாக ஆடிய ஜிம்பாபே அணி 17.5 ஓவர்களில் 129 ரன்னுக்கு அனைத்துவிக்கட்டுகளையும் இழந்தது. அபிஷேக் ஷர்மா 3 விக்கட்டுகள், யஷ் தாகூர், பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கட்டுகள், ரவி பிஷ்னோய், ஷிவம் துபே, திலக் வர்மா தலா ஒரு விக்கட் எடுத்தனர். இஷான் கிஷன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
மூன்றாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி முதலில் மட்டையாடியது. வைபவ் சூர்யவன்ஷி (49 பந்துகளில் 81 ரன், 8 ஃபோர், 4 சிக்சர்), அபிஷேக் ஷர்மா (2 ரன்), இஷான் கிஷன் (29 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (27 ரன்), திலக் வர்மா (ஆட்டமிழக்காமல் 11 ரன்), ரிங்குசிங் (14 பந்துகளில் 25 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 192 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆடிய ஜிம்பாபே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 157 ரன் எடுத்துத் தோல்வியடைந்தது. அந்த அணியின் ரியான் புரி 54 ரன் எடித்தார். இந்திய அணியின் மயாங்க் யாதவ் 3 விக்கட்டுகளும், யஷ் தாகூர் 2 விக்கட்டுகளும் அஷோக் ஷர்மா மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கட்டும் எடுத்தனர். ஆட்ட நாயகநாகவும் தொடர் நாயகனாகவும் வைபவ் சூர்யவன்ஷி அறிவிக்கப்பட்டார்.
IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி! News First Appeared in Dhinasari Tamil