Criminal Cases On Chief Ministers: இந்தியாவில் உள்ள விஜய் உள்ளிட்ட 28 முதலமைச்சர்களில், தெலங்கானாவின் ரேவந்த் ரெட்டி முதலிடம் வகிக்கிறார்.
உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையின்படி, இந்தியாவின் 28 மாநிலங்களில் 14 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பதவியில் இருக்கும் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை விரைவுபடுத்துவது தொடர்பான நீண்டகாலமாக நடைபெற்று வரும் வழக்கில், வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தாக்கல் செய்த 96 பக்க அறிக்கையில் இந்தப் புள்ளிவிவரங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ஜூலை 2026 நிலவரப்படி, பதவியில் இருக்கும் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மொத்தம் 4,192 குற்ற வழக்குகள் விசாரணையில் நிலுவையில் இருந்தன. இதில், உத்தரப் பிரதேசம் 1,171 வழக்குகளுடன் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
அதிக வழக்குகளை எதிர்கொண்டு வரும் முதலமைச்சர்கள் பட்டியலில் ரேவந்த் ரெட்டி முதலிடம் பிடித்துள்ளார். ஆய்வுக்குட்பட்ட முதலமைச்சர்களிலேயே அதிகபட்சமாக, இவர் மீது 89 கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. அவருக்கு அடுத்த இடத்தில் மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி29 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஆகியோர் மீது தலா 19 வழக்குகள் உள்ளன. கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் 18 வழக்குகளையும், அவரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஐந்து வழக்குகளையும் எதிர்கொண்டுள்ளனர். மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் ஆகியோர் தலா நான்கு வழக்குகளைக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் பீகார் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி ஆகியோர் மீது தலா இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. சிக்கிம் முதலமைச்சர் பி.எஸ். தமாங், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா ஆகியோர் மீது தலா ஒரு வழக்கை எதிர்கொண்டு வந்துள்ளனர். மாநிலங்கள் வாரியாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் குற்றவியல் வழக்கு பதிவுகளையும் ஆய்வு செய்து இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மேற்கு வங்கத்தில்தான் அதிகபட்ச விகிதம் காணப்படுகிறது. அதன்படி 292 சட்டமன்ற உறுப்பினர்களில் 170 பேர், அதாவது 58%, கடுமையான குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.
கேரளா 57 சதவிகிதம், ஆந்திரப் பிரதேசம் 56 சதவிகிதம், தெலங்கானா 49 சதவிகிதம், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா தலா 45 சதவிகிதம் என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. பீகாரில் 42 சதவிகிதம் மற்றும் மகாராஷ்டிராவில் 40 சதவிகிதம் சட்டமன்ற உறுப்பினர்கள் கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர். மக்களவையின் 543 உறுப்பினர்களில் 170 பேர், அதாவது சுமார் 31 சதவிகிதம் பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை உறுப்பினர்களில் 11 பேரும், கேரளாவில் உள்ள 21 உறுப்பினர்களில் 11 பேரும் இதுபோன்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர். பீகாரில் உள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 19 பேர் கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர், அதேசமயம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 34 பேர் இந்தப் பிரிவில் உள்ளனர். மகாராஷ்டிராவின் 48 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 17 பேர், மேற்கு வங்கத்தின் 42 பேரில் 16 பேர், ஆந்திரப் பிரதேசத்தின் 25 பேரில் ஒன்பது பேர் வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.
மாநிலங்களவையில் உள்ள 233 உறுப்பினர்களில் 75 பேர், அதாவது 33 சதவிகிதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களில், 40 உறுப்பினர்கள், அதாவது மொத்தத்தில் 18 சதவிகிதம் பேர் கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.