மச்சான் மனைவியுடன் கள்ளத்தொடர்பு !! பட்டப்பகலில் துடிதுடிக்கக் கொலை - பரபரப்பு சம்பவம்
சேர்மசாமி August 25, 2026 01:14 AM

"மச்சான் மனைவியுடன் திருமணம் மீறிய உறவு"

சென்னை புழல் அடுத்த காவாங்கரை 10 - வது தெருவைச் சேர்ந்தவர் ரத்தினவேலு ( வயது 35 ) கூலி வேலை செய்து வரும் இவர் , தனது மனைவி அம்முவுடன் வசித்து வந்தார். இவரது மனைவிக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். இந்நிலையில், ரத்தினவேலுவுக்கும் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர், வ.உ.சி. தெருவில் வசித்து வரும் அவரது மச்சானின் மனைவிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து பழகி வந்திருக்கின்றனர். எனவே இவர்களது உறவு குறித்து அறிந்த குடும்பத்தினர் , ரத்தினவேலுவை பலமுறை எச்சரித்து அந்தப் பெண்ணுடனான தொடர்பை கைவிடுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் , எச்சரிக்கையையும் மீறி ரத்தினவேலு தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

விரட்டி விரட்டி வெட்டி கொலை

வழக்கம் போல் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு ரத்தினவேலு பாடியநல்லூர் வ.உ.சி தெரு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த அவரது மச்சான்கள் , கள்ளத் தொடர்பு தொடர்பாக அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் , மறைத்து வைத்திருந்த கத்தியால் ரத்தினவேலுவை துரத்தி துரத்தி சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த ரத்தினவேலு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் சாலையில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவலறிந்த செங்குன்றம் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தினவேலுவின் உடலை மீட்டு , பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து செங்குன்றம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் உதவி ஆணையாளர் பிராங்க்லின் ரூபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.