தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக உலா வந்தவர் ஆர்.சுந்தர்ராஜன். ரஜினிகாந்த், மோகன், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர். பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், குங்கும சிமிழ், அம்மன் கோயில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு, ராஜாதி ராஜா என பல வெற்றிப்படங்களை இயக்கியவர்.
இவர் சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சத்யராஜுடன் இணைந்து பங்கேற்று பேசினார். அப்போது, இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, அவர் கூறியதாவது,
நடிகர் மோகனுடன் மெல்ல திறந்தது கதவு பண்ணும்போது பயணங்கள் முடிவதில்லை பண்ணேன், நான் பாடும் பாடல் பண்ணேன், குங்குமச் சிமிழ் பண்ணேன். இப்போது, மெல்ல திறந்தது கதவு 4வது படம் பண்ணுகிறேன். எனக்கு படத்தில் ஒரு சண்டையாவது வைக்க வேண்டும். ஏனென்றால், அவருக்கு சண்டை வைக்கமாட்டோம். நான் வைக்கமாட்டேன். எனக்கு தோன்றவில்லை.
எனக்கு ஒரு சண்டையாவது வைக்க வேண்டும் என்றார். ஏவிஎம் சரவணனிடம் சொல்லிவிட்டார். அவர் என்னிடம் வந்து மோகன் ஏதோ கேட்கிறான்பா? என்று என்னிடம் சொன்னார். நான் போய்ட்டு என்னயா பிரச்சினை? என்று கேட்டேன். இந்த படத்தில் எனக்கு ஒரு சண்டையாவது வைக்க வேண்டும் என்று கேட்டார். நான் படம் முடிவதற்குள் உனக்கும், எனக்கும் சண்டை வரப்போகிறது. படத்தில் எதற்கு சண்டை?
சின்னப்பா தேவர் அனைத்து வித்தையும் கற்றவர். அதில் பாதிதான் எம்ஜிஆருக்குத்தான் தெரியும். ஆனால், எம்ஜிஆர் சிலம்பு எடுக்கும்போது இருந்த அழகு சின்னப்பா தேவருக்கு வரவில்லை. அதுமாதிரி மோகன் சண்டை போட்டா பார்க்க மாட்டான். இதை எல்லாம் ஜட்ஜ் பண்ணித்தான் நாம் படத்தில் போகிறேன்.
ரஜினி கத்தியை தட்டிவிடுவாரு. அது அந்தரத்தில் சுத்தும். அந்தரத்தில் கத்தி எங்கயாவது சுத்துமா? ரஜினி திரும்புனா அந்த கண்ணு 10 பேரை அடிக்கும்னு சொல்லும். ரஜினி திரும்புனா 10 பேர் கை தட்டுவான். மோகன் கத்தியை தட்டிவிட்டா, நம்மளை தட்டிவிடுவானே தவிர நம்மளை தட்டமாட்டான்.
இவ்வாறு அவர் பேசினார்.
1980 -90 காலகட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக மோகன் உலா வந்தார். பயணங்கள் முடிவதில்லை, தூங்காத கண்ணின்று ஒன்று, நான் பாடும் பாடல், குங்கும சிமிழ், மெல்ல திறந்தது கதவு ஆகிய படங்களை மோகனை வைத்து ஆர்.சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். தூங்காத கண்ணின்று ஒன்று படம் தவிர மற்ற அனைத்து படமும் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படம் ஆகும்.