அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவின் தேர்தல் முறையைப் பாராட்டியுள்ளார். அமெரிக்காவில் கடுமையான வாக்குப்பதிவு விதிகளை அமல்படுத்தவும், 'சேவ்(Save) அமெரிக்கா சட்டத்தை' செயல்படுத்தவும் அழைப்பு விடுத்த அதே வேளையில், டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவின் தேர்தல் முறையை பாராட்டியுள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக பக்கத்தில், புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் தேர்தல்களை எப்படி நடத்த முடியும் என்று இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது அரசிடம் கேட்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
தனது பதிவில், "இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படித் தேர்தல்களை நடத்த முடியும் என்று எங்கள் நிர்வாகத்திடம் கேட்டார். கடந்த தேர்தலில் இந்தியாவில் 64.6 கோடி வாக்காளர்கள் இருந்தனர்! 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் மூலம் வாக்களித்தனர். மேலும், ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். நாம் இப்போது 'அமெரிக்காவைக் காப்பாற்றும் சட்டத்தை' நிறைவேற்ற வேண்டும்." என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தலின் போது கணிசமான விமர்சனங்களை எதிர்கொண்டார். அவர் பாரபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இருப்பினும், தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, அவர்களின் கவலைகளுக்குத் தீர்வுகளை வழங்கியது. இந்நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட இந்திய தேர்தல் ஆணையத்தை பாராட்டியுள்ளார்.
ட்ரம்ப்பின் கருத்துக்கு ஆதரவாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோரும், ட்ரம்பின் கருத்துக்களை எதிரொலித்தார். இந்தியாவின் தேர்தல் முறையை குறிப்பிடுகையில், அமெரிக்க அதிபர் கூறியது "முற்றிலும் சரி" என்று அவர் கூறியுள்ளார். கடந்த தேர்தலில் இந்தியாவின் 64.6 கோடி வாக்காளர்களைச் சுட்டிக்காட்டிய கோர், ஒவ்வொரு வாக்காளருக்கும் அடையாள அட்டை இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும், 'சேவ் அமெரிக்கா சட்டத்தை' நிறைவேற்றுமாறு காங்கிரஸையும் அவர் வலியுறுத்தினார்.
President Donald J. Trump is absolutely correct! 646 MILLION voters, every single one required an ID in India’s last election. Congress should pass THE SAVE AMERICA ACT! pic.twitter.com/lqQHSZvWk7
— Ambassador Sergio Gor (@USAmbIndia) August 18, 2026
அமெரிக்க வாக்காளர் தகுதி பாதுகாப்புச் சட்டம் என்றும் அழைக்கப்படும் 'சேவ் அமெரிக்கா சட்டம்' நிறைவேற்றப்படுவதை ட்ரம்ப் ஆதரிக்கிறார். முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம், அமெரிக்கத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு, குடியுரிமைக்கான ஆவணச் சான்று மற்றும் புகைப்பட அடையாள அட்டை போன்ற கடுமையான நிபந்தனைகளை விதிக்கும். இத்தகைய விதிகள் தேர்தல்களின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்க உதவும் என்று ட்ரம்ப் நீண்ட காலமாக வாதிட்டு வருகிறார்.
இந்தச் சட்டம், வாக்காளர் அடையாளம் மற்றும் குடியுரிமைச் சான்று தொடர்பான தேவைகள் உட்பட, அமெரிக்காவில் தேர்தல் விதிகளைக் கடுமையாக்க முயல்கிறது. ட்ரம்ப் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்று வருகிறார், மேலும் இது அவரது பிரசாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. ட்ரம்பின் சமீபத்திய கருத்துக்கள், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தேர்தல் செயல்முறைகளை ஒப்பிடுவதற்கான அவரது முயற்சிகளையும் பிரதிபலிக்கின்றன.