ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான கருப்பு திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பதிவு செய்தது. கருப்பு படத்திற்கு பின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு அவருக்கு வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்திற்கு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் நடிப்பிற்கு திரும்பவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ரேடியோவில் ஆர் ஜேவாக தனது கரியதை தொடங்கிய ஆர் ஜே பாலாஜி நகைச்சுவை நடிகர் , ஹீரோ , கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி வருபவர். எல்.கே.ஜி , மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களைத் தொடர்ந்து முன்னணி நடிகரான சூர்யாவின் கருப்பு திரைப்படத்தை இயக்கினார். பல்வேறு தடைகளை கடந்து கடந்த மே 14 ஆம் தேதி வெளியான கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ 350 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக கருப்பு திரைப்படம் இடம்பிடித்துள்ளது
கருப்பு திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் ஆர் ஜே பாலாஜி அடுத்தபடியாக இயக்கப்போகும் படம் குறித்து பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. உடனடியாக அவர் கருப்பு 2 ஆம் பாகத்தை இயக்குவாரா என்கிற கேள்வியும் இருந்து வருகிறது. ஆனால் தற்போதைக்கு கருப்பு 2 ஆம் பாகத்தை இயக்கும் திட்டம் தனக்கில்லை என ஆர் ஜே பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி திரைப்பட இயக்கத்தில் இருந்து கொஞ்ச காலம் இடைவெளி எடுத்துக்கொள்ள இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான எல்.கே.ஜி , வீட்ல விசேஷம் , சிங்கப்பூர் சலூன் , சொர்க்கவாசல் ஆகிய படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
பதிலாக மீண்டும் நடிப்பிற்கு ஆர் ஜே பாலாஜி திரும்பவிருக்கிறார். கிடாரி படம் , மத்தகம் , குயின் ஆகிய வெட் சீரிஸ்களை இயக்கிய பிரசாத் முருகேசன் இயக்கும் புதிய படத்தில் ஆர் ஜே பாலாஜி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.