தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், எதிர்கட்சியாக இருந்த அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதே நேரம் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை பிடித்து அசத்தியது. இந்த நிலையில் அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்த நிலையில், அங்கிருந்த முன்னாள் அமைச்சர்களும் எம்எல்ஏக்களுமான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இதனையடுத்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம்பிடிக்கவும் காய் நகர்த்தினர். இதற்காக தேர்தல் பணியில் இந்த நிர்வாகிகள் ஈடுபட்ட நிலையில், இவர்களின் வெற்றியை எதிர்த்தும் தங்களை வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரி அந்த தொகுதியில் போட்டியிட்டு தேல்வியடைந்த வேட்பாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள போது, இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை விதித்தும், இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, தமிழக சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த தடையை நீக்கக் கோரி கரூர் தொகுதி முன்னாள் எம் எல்.ஏ - எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் வழக்குகள் முடியும் வரை திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் தவறு என முதல் விஜய் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை செயலாளர் தரப்பில், ஐந்து தொகுதிகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை, ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.