தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. அந்த வகையில், கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக திமுக- அதிமுக என இரு கட்சிகள் மட்டுமே ஆட்சியை பிடித்து வந்த நிலையில், நடிகர் விஜய் தலைமையில் 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து அசத்தியுள்ளது. அந்த வகையில் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டது அதிமுக, இதனால் அக்கட்சியில் உட்கட்சி மோதல் உச்சத்தை தொட்டது. தேர்தல் முடிவின் போதே முதல் ஆளாக தவெகவிற்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பிடிக்க அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அதே நேரம் அதிமுகவில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு பிரிவினர் செயல்பட்டனர். அடுத்தடுத்து 6 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மேலும் அதிமுக மாஜி அமைச்சர்களும் தவெகவிற்கு பல்டி அடித்தனர். இதனால் அதிமுக பிளவுப்பட்ட நிலையில், இதனை சீரமைக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளோடு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
ஆனால் இன்னமும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள். இதனிடையே மேலும் 10 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைய இருப்பதாக தவெக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். ஏற்கனவே தவெகவில் இணைந்த எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்டவர்களுக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது தவெகவிற்கு ஆதரவு அளித்து வந்த கம்யூனிஸ்ட் பின்வாங்கும் நிலையில் உள்ளது. எனவே ஆட்சியை தக்க வைக்க கூடுதல் பலம் தேவை என்பதால் மேலும் அதிமுக எம்எல்ஏக்களை இழுக்கும் பணியில் தவெக இறங்கியுள்ளது.
எனவே தனி தொகுதி எம்எல்ஏக்கள் இரண்டு பேரிடம் ஏற்கனவே தவெக பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ள நிலையில், மேலும் 3 பேரை இழுக்க காய் நகர்த்தி வருகிறது. எனவே சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி நிறைவடையவுள்ள நிலையில், இதன் பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேர் தவெகவிற்கு தாவ தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருந்த போதும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தால் உரிய மரியாதை கிடைக்குமா.? மீண்டும் தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா.? என அதிமுக எம்எல்ஏக்கள் யோசிக்க தொடங்கியுள்ளனர். எனவே அரசியலில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்பதற்கு ஏற்ப வரும் நாட்களில் அடுத்த கட்ட நகர்வுகள் தெரியவரும்.