Tenkasi: சைடிஷ் வாங்க லேட் ஆனதால் ஆத்திரம்.. இளைஞர் வெட்டிக்கொலை.. 3 சிறுவர்கள் கைது!
பேச்சி ஆவுடையப்பன் August 26, 2026 10:44 AM

தென்காசி அருகே சைடிஷ் வாங்கி வர தாமதமானதால் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடந்தது என்ன?

இந்த கொடூர சம்பவமானது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நடைபெற்றுள்ளது. அங்குள்ள திரு.வி.க  தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் மாரியப்பன் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 21 வயதான இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் ஆவணி மாதம் கடைசியில் கல்யாணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அப்பகுதியில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் மாரியப்பன் வெட்டி கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார் .

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாரியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில் காவல்துறை கண்காணிப்பாளர் செங்கோட்டுவேலவன் தலைமையிலான போலீசார் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். முதலில் இந்த கொலைக்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் மூன்று சிறுவர்கள் இதில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது

சைடிஷ் வர தாமதமானதால் கொலை

அதாவது கொலை செய்யப்பட்ட மாரியப்பனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அதனால் சம்பவம் நடந்த நாளில் தனது உறவினர் ஒருவரின் மகன் உட்பட 3 சிறுவர்களுடன் சேர்ந்து மாரியப்பன் மது குடித்துள்ளார். அப்போது சைடிஷ் வாங்க அந்த மூன்று சிறுவர்களையும் அவர் அனுப்பியுள்ளார். சென்றவர்கள் ஒரு மணி நேரம் கழித்து வந்ததால் ஆத்திரத்தில் இருந்த மாரியப்பன் அவர்களை தகாத வார்த்தையால் திட்டியதாக சொல்லப்படுகிறது.

இதனால் அவரை சமாதானப்படுத்தி நான்கு பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது போதையில் மாரியப்பன் தங்களை திட்டியது குறித்து அந்த சிறுவர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த மூன்று பேரும் அரிவாளை எடுத்து மாரியப்பனை கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று சிறுவர்களையும் கைது செய்த போலீசார் அவர்களை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த சம்பபம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுமக்கள் கோரிக்கை

மது மற்றும் போதைப் பொருட்களால் சிறுவர்கள் முதற்கொண்டு குற்றவாளிகளாக மாறும் நிலைக்கு இந்த சமூகம் மாறி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு விரைந்து போதையில்லா தமிழகம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். எதிர்கால தலைமுறையினரை இதுபோன்ற சீரழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.