பிக்காக்ஸ் மலைக்குக் கீழே உள்ள ஈரானின் அணுசக்தி நிலையத்தை அமெரிக்கா விரைவில் தாக்கக்கூடும் என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அனைத்து நிகழ்வுகளையும் வாஷிங்டன் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தடுப்பதே அதன் முதன்மை நோக்கம் என்று கூறி, ஈரானுக்கு எதிரான பல மாத கால அமெரிக்க ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய ட்ரம்ப், "நாங்கள் அங்கு ஐந்து மாதங்களாக இருக்கிறோம். அந்த ஐந்து மாதங்களில் நாங்கள் என்ன செய்தோம் தெரியுமா.? அவர்களிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்," என்று கூறிய ட்ரம்ப், அந்த இடத்தில் ஏதேனும் அணு ஆயுதச் செயல்பாடு காணப்பட்டால், அமெரிக்கா பிக்காக்ஸ் மலையை தாக்கக்கூடும் என்றும் எச்சரித்தார்.
மேலும், "பிக்காக்ஸில் யார் வந்து செல்கிறார்கள் என்பதும், ஈரான் முழுவதும் யார் எங்கே நகர்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஏதாவது தவறாக நடந்தால், நாங்கள் அவர்களை தாக்குவோம், கடுமையாக தாக்குவோம்." என்று ட்ரம்ப் கூறினார்.
பிக்காக்ஸ் மலை, ஈரானின் கடுமையாக சேதமடைந்த நடன்ஸ் யுரேனியம் செறிவூட்டும் நிலையத்திற்கு அருகில் உள்ளது. மேலும், அங்கு இரண்டு நிலத்தடி சுரங்கங்கள் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்தத் தளம் தரைக்கடியில் அமைந்திருப்பதால், அது வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
ஈரான் ஆயிரக்கணக்கான சென்ட்ரிஃபியூஜ்களை இந்த தரைக்கடியிலான வசதிக்கு நகர்த்தியுள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை நம்புவதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, இந்தத் தளத்தின் மீதான ஒரு அமெரிக்கத் தாக்குதல், ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான வாஷிங்டனின் நடவடிக்கையை கணிசமாக வேகப்படுத்தக்கூடும்.
அதோடு, அமெரிக்க ராணுவத் தலையீடு ஒரு பெரிய பிராந்திய மோதலை தடுத்ததாக ட்ரம்ப் கூறினார். வாஷிங்டன் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், ஈரான் இஸ்ரேல், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு இன்னும் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும், "நாம் அங்கு செல்லாமல் இருந்திருந்தால், இன்று இஸ்ரேலும் இருந்திருக்காது, மத்திய கிழக்கும் இருந்திருக்காது. இதற்குப் பிறகு அவர்கள் அநேகமாக ஐரோப்பிய நகரங்களையும் நமது நகரங்களையும் தாக்கியிருப்பார்கள்," என்று ட்ரம்ப் கூறினார்.