தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் நேற்று பதிலுரை அளித்த போது திமுக தலைவர்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி விமர்சனம் செய்யப்பட்டதற்கு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து இன்று சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் திமுக கொறடா எ.வ.வேலு பேசினார். அப்போது சர்க்காரியா கமிஷன் தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்க முடியவில்லையெனவும், இதனால் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லையென தெரிவித்தார்.
மேலும் மிசா காலத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையும் அப்போது அவருக்கு நடைபெற்ற சித்தரவதையையும் கூறினார். மேலும் அமலாகத்துறை வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டு மட்டுமே உள்ளதாகவும், இதனை இன்னும் நிரூபிக்கவில்லையென பேசினார். எனவே முதலமைச்சர் விஜய்யின் இந்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.டி.நிர்மல் குமார், மிசா காலத்தில் திருட்டு வழக்கு, பெண்களை இழிவாக பேசிய வழக்கில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். எனவே மு.க.ஸ்டாலின் மிசா வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லையென கூறினார். மேலும் அமலாக்கத்துறை திமுகவினர் மீதான ஊழல்களை பட்டியலிட்டதையும் எடுத்துரைத்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுகவினர் முழக்கத்தை எழுப்பி வந்தனர். ஒரு கட்டத்தில் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டசபையில் இருந்து திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதையடுத்து சபைக்குள் வந்த அவைக்கவாலர்கள் திமுகவினரை குண்டுகட்டாக வெளியேற்றினர்.