“சட்டமன்றத்தை சர்ச் ஆக மாற்றிய CM விஜய்”! தீபம் ஏற்ற மட்டும் தடையா.? மத நல்லிணக்கம் எப்படி மலரும்.? நயினார்
கு. அஜ்மல்கான் September 06, 2026 10:14 AM

யாத்திரையாக கொண்டு செல்லப்படவிருந்த 108 வெற்றிவேல்கள் அடங்கிய வாகனமானது மீஞ்சூர் நெய்தவாயல் அருகே சமூக விரோதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விலைமதிப்பற்ற 2.5 அடி உயர மரகத முருகர் சிலை காணாமல் போன பதற்றம் தணிவதற்குள்ளாகவே, ஆன்மிக அரசியல் கட்சியின் சார்பாக, எம்பெருமான் முருகனின் அறுபடை வீடுகளுக்கும், சிறுவாபுரியில் இருந்து யாத்திரையாக கொண்டு செல்லப்படவிருந்த 108 வெற்றிவேல்கள் அடங்கிய வாகனத்தை, மீஞ்சூர் நெய்தவாயல் அருகே சமூக விரோதிகள் சிலர் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.
 
108 கிராமங்களின் வழிபாட்டிற்காக வழங்கப்படவிருந்த வெற்றிவேல்கள் தீயில் எரிந்து கருகுவதை பார்க்கையில் நெஞ்சம் கனத்துப் போகிறது. சட்டமன்றத்தை “சர்ச்” ஆக மாற்றிய திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு மட்டும் வலுவாக தடை போட்டால் சமூகத்தில் மத நல்லிணக்கம் எப்படி மலரும்? இந்துக்களின் நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்ற சமத்துவ உணர்வு ஆளும் அரசுக்கே இல்லாத போது, சமூக விரோதிகளுக்கு எப்படி பயமிருக்கும்? அதனால் தான் இதுபோன்ற கொடுஞ்செயல்கள் அச்சமின்றி அரங்கேறுகின்றன. இந்துக்கள் மீது தொடரும் இத்தகைய அடக்குமுறைகளும், வன்முறைகளும் ஆபத்தானவை.   

எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், “மதச்சார்பின்மை” என்ற போர்வையில், முழுக்க முழுக்க சிறுபான்மையின மக்களுக்காக மட்டுமே செயல்படாமல், இந்துக்களின் மத அடையாளங்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.