CM Vijay Speech Vs Udhayanidhi: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசாரமான விவாதம் எழும் என எதிர்பார்க்கப்படுகிறஹ்டு.
சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று விரிவாக பதிலுரை அளிக்கிறார். தங்களின் கேள்விகள் தொடர்பாக முதலமைச்சர் தொடர்ந்து மவுனம் காக்கிறார் என கடந்த வியாழனன்று உதயநிதி குற்றம்சாட்டியபோது, திங்கட்கிழமை பதிலளிக்கும்போது யாரும் ஓடிவிடக்கூடாது என வலியுறுத்தி இருந்தார். எனவே, இன்றைய முதலமைச்சரின் உரை திமுகவை நோக்கி மிகவும் தீவிரமாக இருக்கும் எனவும், அவரது உரையை திமுகவினர் முழுமையாக கேட்பார்களாக அல்லது எதிர்ப்பு தெரிவித்து பாதியிலேயே வெளிநடப்பு செய்துவிடுவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதோடு, தமிழ்நாடு அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலமைச்சர் விஜயின் இன்றைய சட்டப்பேரவை பதிலுரை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலமைச்சரின் சட்டப்பேரவை பதிலுரை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய சட்டப்பேரவை விவாதம் தமிழக அரசியலின் எதிர்கால போக்கை தீர்மானிக்கும் என கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சட்டமன்ற அரசியல் என்றால் ஸ்டாலின்–எடப்பாடி பழனிசாமி எனவும், பல தசாப்தங்களாக திமுக–அதிமுக என்ற வலுவான போட்டியே நிலவி வந்தது. ஆனால் 2026 தேர்தலுக்குப் பிறகு அந்த காட்சி மிக வேகமாக மாறியுள்ளது. பழைய ஆட்சியின் வாரிசு Vs புதிய ஆட்சியின் தலைவர்” என குறிப்பிடும் அளவிற்கு விஜயின் எழுச்சி அமைந்துள்ளது. இதனால் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, விஜய் இன்று வெறும் பஞ்ச் வசனங்களால் இல்லாமல், தரவு மற்றும் நிர்வாக முடிவுகளால் பதிலளிக்க வேண்டியிருக்கும். எனவே தான் முதலமைச்சரின் இன்றைய பதிலுரை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
சட்டம்–ஒழுங்கு குறித்த குற்றச்சாட்டுகளை மறுப்பதோடு நின்றுவிடாமல், கடந்த 116 நாட்களில் குற்றங்களை கட்டுப்படுத்த அரசு என்ன செய்தது, காவல்துறையில் என்ன மாற்றம் கொண்டு வந்தது, எதிர்க்கட்சிகள் குறிப்பிடும் சம்பவங்களுக்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதற்கு விவரமான பதில் வந்தால் அது நிர்வாகத் தலைவராக விஜய் தனது பிம்பத்தை வலுப்படுத்த உதவும். உதயநிதி முதலமைச்சருக்கு நேரடியாக சவால் விட்டு பல குற்றச்சாட்டுகளை சட்டமன்றத்தில் முன்வைத்துள்ளார். அந்த ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அரசு அதிகாரப்பூர்வ தரவுகளுடன் எதிர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது. விஜய் தரப்பு ஏற்கனவே முந்தைய திமுக அரசின் குற்ற புள்ளிவிவரங்களையும் தற்போதைய தரவுகளையும் ஒப்பிட்டு பதிலளிக்க முயற்சிப்பதாக அமைச்சர்களின் செயல்பாட்டில் அறிய முடிகிறது. எனவே இன்றைய விவாதம் விஜயின் நிர்வாகத்திற்கான பரீட்சை மட்டும் அல்ல; உதயநிதியின் எதிர்க்கட்சித் தலைமைத் தாக்குதலின் நம்பகத்தன்மைக்கான பரீட்சையாகவும் மாறும்.
விஜய்க்கு ஏற்கனவே மிகப்பெரிய ரசிகர் மற்றும் டிஜிட்டல் ஆதரவாளர் வட்டம் உள்ளது. உதயநிதியைச் சுற்றியும் திமுகவின் வலுவான ஐடி விங் அமைப்பு செயல்படுகிறது. சட்டமன்றத்தில் இவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் ஒரு சில நிமிடங்களிலேயே ரீல்ஸ், ஷார்ட்ஸ் வீடியோ,மீம்ஸ் மற்றும் போஸ்டர் என பல்வேறு வடிவங்களில் தீயாய் பரவ தொடங்குகிறது. இதனால் முதலமைச்சர் விஜயின் இன்றைய பதிலுரையின் உண்மையான முக்கியத்துவம் சட்டம்–ஒழுங்கு விவாதத்தில் யார் வென்றார்கள் என்பது மட்டும் அல்ல. முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒருவரை ஒருவர் தமிழகத்தின் பிரதான அரசியல் போட்டியாளராக பொதுவெளியில் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதற்கான பரிசோதனையாகவும் பார்க்கப்படுகிறது.