நீங்க அமெரிக்காவ சப்போர்ட் பண்ணா...“ தென் கொரியாவுக்கு ஈரான் எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க.?
ஸ்ரீராம் ஆராவமுதன் September 07, 2026 09:44 PM

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் தொடர்ந்து வரும் நிலையில், ஈரானுக்கு உதவ வேண்டாம் என்று அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. ஈரானை ஆதரிக்கும் நாடுகள் பெரும் இழப்புகளை சந்திக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்த சூழ்நிலையில், பாரசீக வளைகுடாவில் ராணுவம் இருப்பது ஆக்கிரமிப்புக்கான ஆதரவு என்று ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியுள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு குறித்து இப்போது பார்க்கலாம்.

தென் கொரியாவிற்கு எச்சரிக்கை பதிவை வெளியிட்ட ஈரான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர்

இது குறித்து பாகாயி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "ஈரானுக்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான உறவுகள் 64 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையானவை. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் எப்போதும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் வளர்ந்துள்ளன. கொரியக் குடியரசுடனான தனது நட்புறவை ஈரான் பெரிதும் மதிக்கிறது. இருப்பினும், ஈரானிய மக்கள் தற்போது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அமெரிக்காவின் போர்க்குற்றங்களுக்கு அவர்களுக்கு உறுதியாக பதிலடி கொடுக்கும் இத்தகைய சூழ்நிலையில், பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் வேறு எந்த நாட்டின் ராணுவ இருப்பும் அல்லது நடவடிக்கைகளில் பங்கேற்பும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நேரடி ஆதரவாகக் கருதப்படும். மேலும், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்." என்று கூறியுள்ளார்.

அதோடு, "இறையாண்மையுள்ள மற்றும் பொறுப்புள்ள எந்தவொரு நாடும், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிந்து, ஈரானிய மக்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலும் கொடூரமான குற்றங்களிலும் ஈடுபடக்கூடாது," என்று அவர் ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப் படைகள், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அன்று ஈரான் மீது தாக்குதலைத் தொடுத்தது. இந்த போர் தற்போது 6 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்கிறது. அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவதில் பின்வாங்கவில்லை. அதேபோல், ஈரானும் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில், கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற மூன்று ஈரானியக் கப்பல்களை அமெரிக்கா தாக்கியது. இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படி, இரு நாடுகளுமே விட்டுக்கொடுக்காமல் தாக்குதல் நடத்தி வருவதால், மத்திய கிழக்கில் மீண்டும் உச்சகட்ட போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.