போயஸ் கார்டனில் உருவாகி வரும் நடிகை நயன்தாராவின் புதிய வீடு ரசிகர்களிடையே பரபரப்பான பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த வீட்டின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது என்றே சொல்லலாம் .
சென்னையின் மிகவும் ஆடம்பரமான குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக போயஸ் கார்டன் அறியப்படுகிறது. அரசியல் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கும் இங்கு சொத்துகள் உள்ளன. அந்த வரிசையில் தற்போது நயன்தாராவும் இணைந்துள்ளார்.
கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும்ன் நயன்தாரா சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான போயஸ் கார்டனில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து அவர் வாங்கியுள்ள இந்த டூப்ளக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பு ரூ.31.5 கோடி எனத் தகவல் வெளியாகியுள்ளது.
போயஸ் கார்டனில் உள்ள ‘லெகசி’ என்ற குடியிருப்பு திட்டத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது தளங்களில் இந்த டூப்ளக்ஸ் வீடு அமைந்துள்ளது. மொத்தம் 14,369 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டுடன் 5,308 சதுர அடி பிரிக்கப்படாத நிலப் பங்கும் உள்ளது. இந்த சொத்தின் விற்பனைப் பத்திரம் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமாக தயாராகி வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவின் போயஸ் கார்டன் வீடு 😍🥰❤️ pic.twitter.com/Vp4kggIb4P
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) September 7, 2026
இந்த சொத்து வாங்கியதில் நயன்தாராவுக்கு 90 சதவீத பங்கும், விக்னேஷ் சிவனுக்கு 10 சதவீத பங்கும் உள்ளது. மேலும், குடியிருப்புடன் சுமார் எட்டு மூடப்பட்ட கார் பார்க்கிங் இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பரிவர்த்தனையில் சதுர அடிக்கு சுமார் ரூ.21,946 என்ற அளவில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நயன்தாராவுக்கும் சென்னையில் ஏற்கனவே சொத்துகள் உள்ள நிலையில், இந்த புதிய டூப்ளக்ஸ் வீடு அவரது சொத்து பட்டியலில் மேலும் ஒரு முக்கியமான சேர்க்கையாக அமைந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவனுடன் இணைந்து குடும்ப வாழ்க்கையிலும், திரைப்படத் துறையிலும் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, தற்போது சென்னையின் முக்கியமான முகவரிகளில் ஒன்றில் இந்த ஆடம்பர சொத்தை வாங்கியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.