AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ், கயாது லோஹர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘இம்மார்டல்’ திரைப்படம் ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. படம் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படத்தின் வெற்றியை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் படக்குழுவினர், திரையுலகினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விழாவில் நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோருக்கு தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் உயர்தர கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கினார். தொடர்ந்து ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக்கையும் பரிசளித்தார்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், படத்தின் உருவாக்கத்தில் சிஜி உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக தெரிவித்தார். படத்தின் தரத்தில் சமரசம் செய்யாமல் பணியாற்றியதாகவும், அதற்காக நீண்ட காலம் காத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜிவி பிரகாஷுக்கும், தமிழகத்தில் படத்தை வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலனுக்கும் நன்றி தெரிவித்தார். ஆரம்பத்தில் 250க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான படத்திற்கு, வரவேற்பை தொடர்ந்து கூடுதல் காட்சிகள் மற்றும் பெரிய திரைகள் ஒதுக்கப்பட்டதாகவும் கூறினார்.
ஜிவி பிரகாஷ் பேசும்போது, தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் பொறுமைக்கும் நம்பிக்கைக்கும் இந்த வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவித்தார். படத்தின் புரமோஷன் பணிகள் மற்றும் வெளியீட்டின்போது வழங்கப்பட்ட ஆதரவையும் அவர் குறிப்பிட்டார். ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
வெற்றி விழாவில் ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், எடிட்டர் ராஜேஷ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது நன்றியை தெரிவித்தனர். படத்தின் வெற்றியில் ஊடக நண்பர்களின் பங்களிப்பு முக்கியமானது என்று அவர்கள் குறிப்பிட்டனர். படம் வெளியான பிறகு பல இயக்குநர்கள் தன்னை தொடர்புகொண்டு வாழ்த்தியதாக எடிட்டர் ராஜேஷ் தெரிவித்தார்.
இதேபோல், படத்தில் நடித்த நடிகர் குமார் நடராஜன், இயக்குநர் மாரியப்பன் சின்னாவின் தெளிவான அணுகுமுறையையும், தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் நம்பிக்கையையும் பாராட்டினார். ஜிவி பிரகாஷ் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் முழுமையாக தன்னை அர்ப்பணித்து நடிப்பதாகவும் அவர் கூறினார். தற்போது ‘இம்மார்டல்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.