AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ், கயாது லோஹர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘இம்மார்டல்’ திரைப்படம் ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், வித்தியாசமான ஜானரில் படத்தை உருவாக்கியதால் சிஜி உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களில் ஆரம்பம் முதலே கவனம் செலுத்தியதாக தெரிவித்தார். படத்தின் தரத்தில் சமரசம் செய்யாமல் பணியாற்றியதாகவும் அவர் கூறினார். படத்தின் உருவாக்கம், வெளியீடு மற்றும் புரமோஷன் பணிகளில் ஜிவி பிரகாஷ் வழங்கிய ஒத்துழைப்பையும் அவர் பாராட்டினார்.
விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பேசிய சக்திவேலன், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதலே நல்ல வரவேற்பு கிடைத்ததாக தெரிவித்தார். ஷோ பை ஷோ வசூல் அதிகரித்த நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் மற்றும் பெரிய திரைகள் ஒதுக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், ஜிவி பிரகாஷுடன் இதுவரை ஏழு படங்களில் பணியாற்றியுள்ளதாகவும், அந்த ஏழு படங்களுமே தனக்கு வெற்றிப் படங்களாக அமைந்துள்ளதாகவும் சக்திவேலன் தெரிவித்தார். இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷின் உழைப்பையும், சாம் சி.எஸ். அவர்களின் பின்னணி இசைக்கான கூடுதல் கவனத்தையும் அவர் பாராட்டினார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., ‘இம்மார்டல்’ வெற்றிப்படமாகும் என்ற நம்பிக்கை ஆரம்பம் முதலே இருந்ததாக கூறினார். ஒரு படம் வெற்றி பெற கதை, பிரம்மாண்டமான உருவாக்கம் மட்டுமின்றி, அதில் பணியாற்றும் அனைவரின் உண்மையான உழைப்பும் முக்கியம் என்றும் தெரிவித்தார்.
நடிகர் கார்த்தி பேசும்போது, படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் சினிமாவில் தொடர்ந்து பயணிக்க தனக்கு நம்பிக்கையை அளித்துள்ளதாக தெரிவித்தார். இதே படக்குழுவினர் இணைந்து மீண்டும் ஒரு வித்தியாசமான ஜானரில் படம் உருவாக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் தெரிவித்தார்.
நடிகை மிருதுளாவும், சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினார். நடிகர் குமார் நடராஜன், இயக்குநர் மாரியப்பன் சின்னா கதை சொல்லும்போதே படம் எப்படி வர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்ததாகவும், தான் நினைத்தபடியே அதை திரையில் கொண்டு வந்துள்ளதாகவும் பாராட்டினார். கயாது லோஹரின் நடிப்பையும் அவர் குறிப்பிட்டார்.