5 தொகுதிக்கு இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை.! விஜய்க்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
கு. அஜ்மல்கான் September 08, 2026 03:44 PM

தமிழகத்தில் தவெக 108 தொகுதியில் வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்து முதலமைச்சராக பதவியேற்றார் விஜய், இதனையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் அந்த கட்சியில் இருந்து வெளியேறி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். 

இதனால் தமிழகத்தில் 6 எம்எல்ஏக்கள் இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதே போல முதலமைச்சர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மொத்தமாக 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 7 தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால்,  திருச்சி கிழக்கு,  கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங் கோட்டை  வெங்கடாஜலபதி, என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டது. தேர்தல் ஆணையமும், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கில், ஒரு எதிர் மனுதராராக இருந்த முதல்வர் விஜய் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17 ஆம் தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால்  மே 10 ம் தேதியே தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும். ராஜினாமா செய்து, அதை சபாநாயகர் ஏற்ற நாளில் எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. மனுவைத் தாக்கல் செய்துள்ள மனுதாரர் சம்மந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் வழக்கு தொடர்ந்தவரோ அல்ல, வாக்காளரும் அல்ல. திருச்சி கிழக்கு தொகுத்தியில மக்கள் பிரதிநிதி இல்லாமல் காலவரையின்றி இடைத்தேர்தலைத் தாமதப்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதே போல் தடையை நீக்க கோரி அதிமுகவில் வெற்றி பெற்று பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த  முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உள்ளிட்டோரும் தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமைநீதிபதி தலைமையிலான முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெருந்துறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முரளிதர், ஜெயக்குமார் வெற்றியை  எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டதாகவும் எனவே தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

 தேர்தல் ஆணையம் சார்பாக வழக்கறிஞர்  நிரஞ்சன் இராஜகோபால், நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்கப்பெறவில்லை என்றும் வந்தபின் அதனை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். அனைத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேர்தல் அறிவிப்புக்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 28ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.