கமல்ஹாசன் - சரிகா தம்பதியினருக்கு விவாகரத்து ஆன நாளில் சக நடிகரான கருணாஸ் செய்த சம்பவத்தை நடிகர் காதல் சுகுமார் தனது சமூக வலைத்தளப் பதிவில் பகிர்ந்துள்ளார்.
காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரீட்சையமானவர் சுகுமார். அதனால் தொடர்ந்து காதல் சுகுமார் என்றே அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தன் சினிமா வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்வுகளை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் பட ஷூட்டிங்கில் நடந்த நிகழ்வு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதாவது, “விருமாண்டி முடித்த கையோடு வசூல்ராஜா தொடங்கிவிட்ட நேரம் அது..கலக்கப் போவது யாரு பாடல் சூட்டிங் சென்று கொண்டிருந்தது. அப்போது கமல்ஹாசன் என்ன சந்தானம் என என்னை அழைத்தார். விருமாண்டியில் எனது பாத்திரப் பெயர் சந்தானம்.இயக்குனர் சந்தான பாரதியை கமலுக்கு மிகப் பிடிக்கும் என்பதால் எனக்கு அந்தப் பெயரை வைத்திருந்தார்.
என்னிடம், விருமாண்டி எப்படி இருந்திச்சி..வசூல்ராஜா என்ன சொல்லுது? என லொக்கேஷன் சூழல் பற்றிக் கேட்டார். நான் அதற்கு
அது வேற ஃபீல் சார் ஊரு..மாடு, சாணி வாசனை, ஒரே டிரெஸ்ஸு..படம் வாழ்ந்தா மாதிரியே இருந்திச்சி.. இது புது டிரெஸ்ஸு பளிச்சின்னு பொண்ணுங்க .. தினம் தீவாளி.. சட்டுனு பஸ்ஸேறி டவுனுக்கு வந்தா மாதிரியே இருக்கு.. என சொன்னதும் முகம் மலர்ந்தார்.
கௌதமி மேடத்தை அழைத்து எங்கிட்ட சொன்னத இவங்ககிட்ட கொஞ்சம் சொல்லுங்களேன் என்றார். மேடமும் கேட்டதும் களுக்கென சிரித்து விட்டார்கள். கமல் சாரிடம் பிடித்தது..தனக்கு பிடித்து விட்டால் உடனே அதற்கு அங்கே இருக்கும் அவர் ஆட்களை அழைத்து இவர் சொல்றது நல்லா இருக்கு பாருங்களேன் என அங்கீகாரம் அளித்துவிடுவார்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் பிர்லா கோளரங்கத்தில் ஒரு டெட்பாடியை கமல் சார் வெட்டுவதைப் போல சீன் எடுக்கப்பட்டது. பாடி உட்பட எல்லோரும் அவருக்காக காத்திருந்தார்கள். 11மணிக்கு கார் வந்ததும் லேட் ஆனதால் காரிலேயே மேக்கப் டச் பண்ணிட்டேன். வாங்க டேக் போகலாம். அவ்வளவு தொழில் பக்தி என்று நடக்க நடிகர் கருணாஸ் அண்ணன் ஓடிச்சென்று அவர் காலைத் தொட்டு அண்ணே என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கண்ணே என்றார்.
கமல் பதறி இரண்டடி நகர்ந்தவர், ஏங்க கால்லலாம் விழறீங்க..(அவருக்கு காலில் விழுவது பிடிக்காது) என கேட்டார். அதற்கு கருணாஸ், அண்ணே இன்னைக்கு என் கல்யாண நாள் அதான் ஆசீர்வாதம் கேட்டேன். சட்டென முகம் மாறியவர். நல்லா கேட்டீங்க போங்க ஆசீர்வாதம் .. அதுவும் இன்னைக்குப் பார்த்து" என்று சொல்லி நகர்ந்தார்.. யாருக்கும் எதுவும் புரியவில்லை..
பின்னாலேயே வந்த உதவியாளர் சன்னமான குரலில் சார் கோர்ட்ல இருந்து வர்றாரு இன்னைக்கு அவருக்கு டைவர்ஸ் குடுத்துட்டாங்க..(சரிகா மேடம்)
அந்த சூழலே ஒரு கணம் ஸ்தம்பித்து ...மீள்வதற்கு வெகு நேரமானது. பெரும்பாலான சிறப்புமிகு கலைஞர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை நன்றாக இருப்பதில்லை.பொதுவாழ்க்கை என்று வந்து விட்டாலேயே குடும்ப வாழ்க்கைக்கு செலவிடும் நேரம் குறைந்து விடும்.நிறைய மிஸ் பண்ணுவோம். குடும்பத்தில் முக்கியமான நிகழ்வுகளை தவிர்க்கும் சூழல் ஏற்படும். புரிந்து கொண்டால் ஓக்கே..இல்லாவிட்டால் விரிசல்தான் என சுகுமார் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.