சிசிடிவி கண்காணிப்பு.. பணம் கேட்டால் திட்டு.. டார்ச்சர் செய்த மாமனார்.. போட்டுத்தள்ளிய மருமகள்!
பேச்சி ஆவுடையப்பன் September 09, 2026 12:14 AM

சிசிடிவி கேமராக்கள் மூலமான தொடர்ச்சியான கண்காணிப்பு இருந்ததால் மாமனாரை மருமகள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த கொடூர சம்பவமானது உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் 5ம் தேதி இரவு 63 வயதான மருந்துத் தொழிலதிபர் வினீத் மினோச்சா தனது குடியிருப்பில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வினீத் மினோச்சா உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

அந்த வகையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த குடும்பத்துடன் தொடர்புடைய முன்னாள் ஊழியரான விஷால் மற்றும் அவரது நண்பர் ராஜ் கிஷோர் மீது போலீசாரின் சந்தேகப்பார்வை விழுந்தது. செப்டம்பர் 6ம் தேதி இரவு நடந்த ஒரு மோதலைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதானது வினீத் மினோச்சாவின் 36 வயது மருமகளான ஷாலு தான் தனக்கு பணம் கொடுப்பதாக உறுதியளித்தார். அதன் பேரிலேயே இந்த கொலை நடந்ததாக விஷால் தெரிவித்துள்ளார். இது போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

இது வழக்கின் விசாரணையில் திருப்பு முனையாக அமைந்தது. உடனடியாக ஷாலுவை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதேசமயம் அவர் ஆரம்பத்தில் வழக்கின் விசாரணையை திசை திருப்ப முயன்றதை போலீசார் கண்டறிந்தனர். ஆனால் விசாரணையில் தான் இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். எதனால் இந்த கொலை நடந்தது என எழுந்த கேள்விக்கும் அதிர்ச்சி பதில் தான் வந்தது. 

அதாவது  ஷாலு தனது மாமனார் சிசிடிவி கேமராக்கள் மூலம் வீட்டிற்குள் நடக்கும் நடவடிக்கைகளை கண்காணித்ததாகவும், தான் இரவு நேர விருந்துகளுக்குச் செல்வதையோ அல்லது தாமதமாக வீடு திரும்புவதையோ விரும்பவில்லை. கடுமையாக என்னிடம் நடந்துக் கொண்டார். தான் என்னதான் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் தனக்கு அதிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் ஷாலு கூறியுள்ளார். தனக்கும் தன் கணவருக்கும் ஏற்படும் சிறு செலவுகளுக்குக் கூட மாமனாரிடம் பணம் கேட்க வேண்டிய நிலை இருந்தது. 

இந்த நிலையில் தான் கடந்த ஜூலை 28ம் தேதி ஷாலு ஒரு விருந்துக்கு சென்றிருந்தார். தாமதமாக வீடு திரும்ப மாமனாருக்கும் அவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. அதனால் வினீத்தை தீர்த்துக் கட்ட ஷாலு முடிவு செய்தார். தனது மாமனாரைக் கொல்வதற்காக விஷாலை அணுகி ரூ.6 லட்சம் பணம் தருவதாக உறுதியளித்தார். முதற்கட்டமாக செப்டம்பர் 6ம் தேதி ரூ.2 லட்சம் வழங்கியுள்ளார். 15 நாட்களில் மீதம் உள்ள பணத்தை தருகிறேன் எனவும் ஷாலு தெரிவித்துள்ளார். தனது அபார்ட்மெண்ட்க்கு ஒரு நகல் சாவியை தயார் செய்து விஷாலிடம் கொடுத்துள்ளார். 

செப்டம்பர் 5ம் தேதி இரவு திட்டமிட்டபடி தனது கணவர் சுப்ரத் மற்றும் குழந்தையுடன் விருந்துக்கு சென்றுள்ளார். அவர்கள் சென்ற சில நிமிடங்களில் விஷாலும், ராஜ் கிஷோரும் அங்கு வந்து வினீத் மினோச்சாவை தீர்த்துக் கட்டியுள்ளனர். முதலில் தலையணைக் கொண்டு கொலை செய்வதாக பிளான் போட்ட நிலையில் கடைசியில் படுக்கையறையில் ஒளிந்திருந்து 26 முறை கத்தியால் குத்தி கொலை செய்தனர். ஷாலுவும் அவரது கணவரும் அதிகாலை 3 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு திரும்பிய நிலையில் வினீத் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.