பழனி நிலம் முறைகேடு டூ முன்கூட்டியே கசிந்த ரகசியம் வரை - சிக்கிய குமரகுருபரன் IAS? தூக்கி அடித்த அரசு
குலசேகரன் முனிரத்தினம் September 09, 2026 10:14 AM

TN Govt IAS Transfer: பழனி நிலம் முறைகேடு தொடங்கி மானியக் கோரிக்கை தகவல்களை சேகர்பாபு முன்கூட்டியே குறிப்பிட்டது வரை, குமரகுருபனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்:

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே, 27 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வித்துறைக்கு இன்னசென்ட் திவ்யா, கைத்தறித்துறை செயலாளராக லில்லி, ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மைச் செயலாளராக தர்மேந்திர பிரதாப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளனர். டான்சி அமைப்பின் தலைவராக முன்னாள் தலைமை செயலாளர் முருகானந்தமும், அவர் வகித்து வந்த வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் தலைமை செயலாளர் பதவிக்கு சந்திரமோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய குமரகுருபரன் ஐஏஎஸ் வசமிருந்து இந்து சமய அறநிலையத்துறை பறிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை தனி அமைச்சகமாக அறிவிப்பு

இதுநாள் வரை  வணிக வரிகள், பதிவு மற்றும் சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வந்த இந்து சமய அறநிலையத் துறை, இனி தனி அமைச்சகமாக செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதோடு இந்த துறையின் செயலாளராக இருந்த குமரகுருபரனின் பதவி பறிக்கப்பட்டு, அந்த பொறுப்பு ராஜாராமன் ஐஏஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றத்தில் குமரகுருபரனின் அதிகாரம் குறைக்கப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காரணம் இவர் சேர்த்து கவனித்து வந்த, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறையில் நடந்த பழனி நில முறைகேடு விவகாரம் தான் விஜய் தலைமையிலான அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைகளில் சிக்கிய குமரகுருபரன் IAS:

திமுக ஆட்சிக்காலத்திலேயே பத்திரப்பதிவு துறையில் கோலோச்சிய குமரகுருபரன், அமைச்சர் மூர்த்திக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து மிகப்பெரிய அளவில் கல்லாகட்டியதாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. அப்படி இருந்தும் தவெகவில் உள்ள சில முக்கிய புள்ளிகளை பிடித்து புதிய ஆட்சியிலும் வலுவான துறைகளை பெற்றுள்ளார். ஆட்சியாளர்களுக்கு உண்மையாக இருப்பார் என்று உத்தரவாதத்தின் பேரிலேயே அவருக்கான நியமனம் மேற்கொள்ளப்பட்டதாம். ஆனால், ஒரு சில வாரங்களிலேயே ஒட்டுமொத்த அரசுக்கே கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள், குமரகுருபரனின் துறைகளில் நிகழ்ந்தது தலைமையை மிகப்பெரிய அளவில் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: TN Weather News: சென்னை, திருவள்ளூருக்கு வார்னிங் - மற்ற மாவட்டங்களில் மழை வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை

பழனி நில முறைகேடு டூ கசிந்த ரகசியம்

பழனி நில முறைகேடு:

பழனி தண்டாயுதபானி கோயிலுக்கு சொந்தமான நிலம் சட்டவிரோதமாக தனிநபர் பெயரில் பதிவு செய்யப்பட்ட விவகாரம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கியது. முன்கூட்டியே சிலர் இந்த முறைகேட்டிற்கு முயற்சித்தபோது, அங்கிருந்த சார் -பதிவாளர் முடியாது என கூறி விடுப்பில் சென்றுள்ளார். இதையடுத்து அங்கு வந்த மாற்று சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஒரே நாளில் இந்த பத்திரப்பதிவை முடித்துக்கொடுத்துள்ளார். பழனி சுற்றுவாட்டாரத்தில் எத்தனையோ சார்-பதிவாளர்கள் இருப்பினும்,  வெகுதொலைவில் கொடைக்கானலில் சார்-பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டனை உள்நோக்கத்துடன் பழனிக்கு மாற்று சார்-பதிவாளராக கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கும் அந்த துறையின் செயலாளர் குமரகுருபரனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டு நிலவுகிறது.

முன்கூட்டியே கசிந்த ரகசியம்:

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்பாகவே, மொத்தம் 206 அறிவிப்புகள் என முன்னாள் அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டார். மிகவும் ரகசியமான அரசின் தகவல்கள் முன்கூட்டியே கசிந்தது எப்படி? என்பதும் பேசுபொருளானது. இதற்கும் திமுகவும் மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் குமரகுருபரனே காரணம் என பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் இந்து சமய அறநிலையத்துறை பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இத்தகைய நபர் பத்திரப்பதிவு துறையில் தொடர்ந்து நீடிக்கக் கூடாது எனவும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நபர் முக்கிய பதவிகளில் இருக்கக் கூடாது எனவும் தவெக அனுதாபிகள் பேசி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.