Jason Sanjay: ஜேசன் சஞ்சயை சுத்துப்போட்ட தவெக ஆதரவாளர்கள்.. சேலம் கல்லூரி நிகழ்ச்சியில் பரபரப்பு!
பேச்சி ஆவுடையப்பன் September 09, 2026 10:44 AM

லைகா புரொடக்ஷன்ஸ்  தயாரிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் சிக்மா. இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜாபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்றது. 

சிக்மா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களின் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது முதன்முதலில் தியேட்டரில் சென்று பார்த்த படம் என்ற கேள்விக்கு தன் தந்தை நடித்த திருமலை படம் என ஜேசன் சஞ்சய் என பதிலளித்தார். அப்போது எனக்கு 3 வயது தான் ஆகியிருந்தது. ஆனாலும் அந்த படம் எனக்கு புரிந்தது என கூறினார். இதனைக் கேட்டு அங்கிருந்த மாணவிகள் ஆரவாரம் தெரிவித்தனர்.

தொடர்ந்து சிட்டி ஆஃப் காட் என்ற பிரேசில் நாட்டைச் சேர்ந்த படம் தான் என்னை இயக்குநராகும் ஆர்வத்தை தூண்டியது. இதை சொல்வதால் யாரும் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என ஜேசன் சஞ்சய் தெரிவித்தார். 

இதனையடுத்து புல் த ட்ரிக்கர் என்ற குறும்படத்தை தான் நான் 2022ம் ஆண்டு இயக்கினேன். மேலும் நான் இயக்கியுள்ள சிக்மா படத்தை என்னுடைய படக்குழுவைத் தாண்டி முழு படத்தையும் பார்த்தது லைகா புரொடக்‌ஷன்ஸ் தமிழ்குமரன் தான். அவர் ரொம்ப நாளாகவே என்னிடம் படம் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டே இருந்தார். இவ்வளவு ஆர்வம் கொண்ட தயாரிப்பாளர் கிடைத்தது எனக்கு ஆசீர்வாதம் தான் என ஜேசன் சஞ்சர் தெரிவித்தார். நான் இயக்குநராக படம் இயக்கப்போகிறேன் என அம்மாவிடம் தான் முதலில் சொன்னேன். அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார் என நினைவுக்கூர்ந்தார். 

முன்னதாக ஜேசன் சஞ்சய் பேச தொடங்கியபோது இந்த நேரத்தில் தன்னுடைய குடும்பத்திற்கு நன்றி தெரிவிப்பதாக சொன்னார். அப்போது சுற்றியிருந்த கல்லூரி மாணவிகள் தவெக தவெக என முழக்கமிட்டனர். அதனைக் கேட்டு ஜேசன் சஞ்சய் தம்ப்ஸ் அப் காட்டி பதிலளித்தார். மேலும் நான் இயக்கியுள்ள சிக்மா படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. நம் அனைவருக்குமே வாழ்க்கையில் சிக்மா மொமண்ட் இருந்திருக்கும். 

அதாவது நாம் கஷ்டத்தில் இருக்கும்போது எடுத்த முடிவு ஒன்று அதில் இருந்து விடுபட்டு நம் மொத்த வாழ்க்கையையும் மாற்றியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு சாதாரண மனிதன் வாழ்க்கையில் நடக்கும் கதை தான் இந்த படமாகும். நீங்கள் அனைவரும் தியேட்டர் போய் சப்போர்ட் செய்வீர்கள் என நம்புகிறேன். படம் பிடித்திருந்தால் 4 பேருக்கு சொல்லுங்கள். உங்கள் அனைவரையும் நான் தியேட்டரில் சந்திக்கிறேன். சேலம் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜேசன் சஞ்சய் பேசினார். 


 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.