”திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை” - நிர்மல்குமார் விளக்கம்
குலசேகரன் முனிரத்தினம் September 09, 2026 01:14 PM

Minister Nirmalkumar: தவெக அரசுக்கு கம்யூனிஸ்ட்களின் ஆதரவு 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என, அமைச்சர் நிர்மல்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தவெக கூட்டணியில் கம்யூனிஸ்ட்கள்?

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமாரிடம், தவெக ஆதரவு கட்சிகளின் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்து இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “இதுதொடர்பாக எங்களிடம் ஏற்கனவே தெளிவாக பேசியுள்ளனர். தேர்தல் நேரத்தில் மட்டுமே தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து பேசப்படும். திமுக உடனும் இதே நடைமுறையை தான் பின்பற்றினோம். தவெக ஆட்சிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை. மக்களுக்கான அனைத்து தேவைகளையும் செய்து கொடுக்கும் மக்களுக்கான அரசாங்காமாக இருக்கப்போவதால் கம்யூனிஸ்ட்களின் ஆதரவு 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும்” என நிர்மல்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மிசா பற்றி CM விஜய் உரை குறித்து விளக்கம்

மிசா குறித்த வரலாற்றை தவெகவினர் படிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சண்முகம் பேசியிருப்பது குறித்து கேட்கையில், “இது குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது. எதனால் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என பல விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்றுள்ளன. இஸ்மாயில் அறிக்கையில் கூட மிசா காலத்தில் சிறையில் யார் யாரெல்லாம் தாக்கப்பட்டார்கள் என்பதில் கூட ஸ்டாலின் பெயர் ஒரு சாட்சியாகவே உள்ளது. சிட்டி பாபுவின் மரணத்தில் ஒரு சாட்சியாகவே ஸ்டாலின் பெயர் உள்ளது. இதில் நிறைய கருத்துகள் இருப்பதால் அதற்குள் போக வேண்டியதில்லை” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பழைய வரலாறை ஏன் பேச வேண்டும்?

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலதிபரை கைது செய்தது போன்ற தவெக அரசின் சாதனைகளை பேசியிருக்கலாமே, பழைய வரலாற்றையே ஏன் திரும்ப பேச வேண்டும் என்ற ஒரு கருத்து நிலவுகிறதே என்று கேட்கையில், “திமுக செய்த தவறுகள், திமுக செய்த துரோகங்கள், திமுக தமிழர்களுக்கு செய்தது என்ன? எதிலிருந்து தமிழ்நாட்டை நாம் மாற்றி கொண்டுவருகிறோம் என்பதை சொல்லி தான் ஆக வேண்டும். காவிரியில் என்ன தவறு செய்தார்கள் என்பதை கொண்டுவரவே 40 ஆண்டுகளானது. கடந்த 5 ஆண்டுகளில் திமுக செய்த தவறை திருத்தி பழைய நிலைமைக்கு கொண்டு வர எவ்வளவு போராடிக்கொண்டு இருக்கிறோம் என மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தமிழ்நாடு நிதிநிலை எப்படி இருக்கு? எவ்வளவு மோசமாக இருக்கு? ஒவ்வொரு துறையும் எப்படி மோசமாக உள்ளது? எல்லோரும் எப்படி சிரமப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்? இதில் எவ்வளவு தூரம் மாறி வந்துள்ளோம், எவ்வளவு தூரம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்? 70 வருட கட்சி 3 தலைமுறைகளாக அரசியலில் இருக்கிறோம் எல்லாம் சரிதான். ஆனால் மக்களுக்கு என்ன செய்தீர்கள்? நீங்கள் எதை சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்? என்பதை தெளிவுப்படுத்த வேண்டிய கட்டாயமும், இன்றைய தலைமுறையினர் அதனை அறிய வேண்டிய கட்டாயமும் உள்ளது. 

இதையும் படியுங்கள்: CAG Smart City: ஸ்மார்ட் சிட்டிக்கான ரூ.10 ஆயிரம் கோடி - கார், டிவி என மடைமாற்றாப்பட்ட நிதி - CAG அதிர்ச்சி தகவல்

”திமுக பற்றி இளம் தலைமுறையினர் அறிய வேண்டும்”

திமுக தமிழ்நாடு அரசை எவ்வளவு தூரம் கெடுத்து வைத்துள்ளது? அதிலிருந்து எப்படி நாம் மீண்டு வருகிறோம் என மக்களும் அறிய வேண்டும். காவிரி விவகாரத்தில் 1971 முதல் 74 வரை செய்த தவறுகளை இன்று வரையிலும் சரி செய்ய முடியவில்லை. சர்க்காரிய கமிஷன் வழக்கிற்கு பயந்து தான் கச்சத்தீவை தாரைவார்த்தார்கள். இன்று தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அதற்கு நீங்கள் செய்த தவறு தானே காரணம். இதை சொல்லி தானே ஆக வேண்டும். அப்போதே கருணாநிதி இதை தடுத்து இருந்தால், 50 வருடங்களாக தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டாரள் தானே? இதையெல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு நாம் சொல்லி தான் ஆக வேண்டும்” என அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.