தாராபுரத்தை EPS-க்காக தட்டி தூக்குவாரா.? விஜய்க்காக விட்டுக்கொடுப்பாரா.? எஸ்.பி.வேலுமணி பிளான் என்ன.?
கு. அஜ்மல்கான் September 09, 2026 02:14 PM

ஆட்சியை பிடித்த தவெக

தமிழக சட்டமன்ற தேர்தலில் எதிர்பாரா திருப்பமாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கட்சிகளான திமுக, அதிமுக என்ற இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், ஒட்டுமொத்தமாக காலி செய்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது தவெக, இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.

அதே நேரம் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எனவே தவெகவிற்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பிடித்து விடலாம் என எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான ஒரு அணியினர் திட்டமிட்டனர்.

இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த எம்எல்ஏக்கள்

ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ அதற்கு வாய்ப்பே இல்லையெனவும் உறுதியாக தெரிவித்தார். இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் இரண்டு பிளவாக பிளவுப்பட்டனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 23 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமாரவேல், தாராபுரம் சத்தியபாமா ஆகியோர் அடுத்தடுத்து தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதேபோல திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

2 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு

இதனால் தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், எப்போது தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தேர்தல் வழக்கு காரணமாக 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் மற்ற தாராபுரம், மதுராந்தகம் 2 தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவும், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தேர்தல் பணியை முதல் ஆளாக அதிமுக தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், அந்த தொகுதியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

என்ன செய்யப்போகிறார் எஸ்.பி.வேலுமணி.?

அந்த வகையில் கொங்குமண்டலத்தில் உள்ள தாராபுரம் தொகுதியானது கடந்த முறை எஸ்.பி.வேலுமணி பொறுப்பாளாரா நியமிக்கப்பட்ட நிலையில், சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது. எனவே இந்த முறையும் வெற்றி பெற காய் நகர்த்தி வருகிறது. ஆனால் எஸ்.பி.வேலுமணியோ எடப்பாடி பழனிசாமியின் எதிரான நிலைப்பாட்டிலும், தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவான நிலையிலும் உள்ளார்.

எனவே இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கிவிடும். எனவே இதனை தடுக்க தாராபுரம் தொகுதியில் எந்தவித வேலையும் பார்க்காமல் சைலண்ட் மோடில் எஸ்.பி.வேலுமணி செல்லக்கூடும் என அவரது ஆதரவாளர்கள் வட்டார தகவலாக இருந்து வருகிறது. எனவே இந்த தேர்தல் அதிமுகவிற்கு முக்கிய திருப்பமாக இருக்குமா.? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.