தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் மீதமுள்ள தாரபுரம், மதுராந்தகம் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், வருகிற அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. இதில் முதல் ஆளாக திமுக சார்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகிற 06-10–2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் திரு. ஐ.பரந்தாமன், பி.ஏ., பி.எல்., (தி.மு.க.சட்டத்துறை இணைச் செயலாளர்) அவர்களும்,
தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் திருமதி. எஸ். சுகன்யா, எம்.ஏ., பி.எல்.,, அவர்களும் கழக வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கறிஞரான இ. பரந்தாமன், திமுகவில் சட்டத்துறை இணை செயலாளர் பதவியில் இருந்து வருகிறார். சென்னை எழும்பூர் தொகுதியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு 68,832 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தொகுதி மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் அவருக்கு மீண்டும் வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் மாவட்ட செயலாளரான சேகர்பாபு மீது கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக மீதான தவெகவின் விமர்சனத்திற்கு கடும் பதிலடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளராக பரந்தாமன் அறிவிக்கப்பட்டுள்ளார்.