Sardar 2: ரொம்ப நாள் ஏக்கம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்.. சர்தார் 2 படம் பற்றி நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி!
பேச்சி ஆவுடையப்பன் September 09, 2026 04:44 PM

சர்தார் 2 படத்தைப் பார்ப்பதற்கு முன்னர் அதன் முதல் பாகத்தைப் பார்க்க வேண்டும் என ரசிகர்களுக்கு நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் சர்தார் 2. இந்தப் படம் 2022ம் ஆண்டு வெளியான சர்தார் படத்தின் அடுத்தப் பாகமாகும். இப்படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாகிறது. 

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, சர்தார் படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. நடிகர் கமல்ஹாசனுக்கு எப்படி பெயர் சொல்லும் படமாக இந்தியன் உள்ளதோ, அதேபோல் தான் எனக்கும் இந்த படம் உள்ளது. அந்த வகையில் சர்தார் 2 என் திரை வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான படமாக இருக்கும். இதுபோன்ற ஒரு உளவாளி கேரக்டர் கொண்ட திரைக்கதையில் பணியாற்றியது என் அதிர்ஷ்டம். ரசிகர்கள் சர்தார் 2 படத்தைப் பார்ப்பதற்கு முன்னர் அதன் முதல் பாகத்தைப் பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அப்படத்தை யூட்யூபில் இலவசமாக பார்க்கலாம். அதன்பிறகு சர்தார் 2 பார்த்தால் உங்களால் நிச்சயமாக படத்துடன் ஒன்றிணைய முடியும். 

நான் பல நேரங்களில் ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் இதுபோன்ற ஒரு படத்தை நம்மால் தமிழ் சினிமாவில் எடுக்க முடியாதா என்ற எண்ணம் மனதில் தோன்றும். ஆனால் சர்தார் 2 படம் மூலம் அப்படியான ஒரு படத்தை எடுக்க முடியும் என முழு திருப்தியுடன் சொல்கிறேன். இந்த படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் ஒரு வலுவான திரைக்கதையுடன் அமைத்துள்ளார். இசையும், ஆக்‌ஷன் காட்சிகளும் நிச்சயம் படத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என நம்புகிறேன் என கார்த்தி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுப்பது எளிதல்ல. இந்தப் படத்தைத் தயாரித்த எனது தயாரிப்பாளர்களுக்கும் அதை வெளியிடும் நிறுவனங்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். ஆஷிகா ரங்கநாத் மற்றும் மாளவிகா மோகனன் ஆகிய இரண்டு ஹீரோயின்கள் இந்த படத்தில் உள்ளனர். சர்தார் 2 படம் அவர்களின் நடிப்புத்திறமையை வெளிக்காட்டும் வகையில் அமையும். இந்த படத்தில் நடனமாட மட்டும் அவர்கள் வரவில்லை. சண்டை காட்சிகளிலும் அதிரடி காட்டியிருக்கிறார்கள். மேலும் வில்லனான எஸ்.ஜே.சூர்யா முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வழங்கியுள்ளார். அவருடைய நடிப்பு அனைவரையும் கவரும் எனவும் கார்த்தி பேசினார். 

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.க்கு சர்தார் 2 படம் 100வது படம் என்பதால் மிகச் சிறப்பாக வந்துள்ளது கைதிக்குப் பின் என்னுடைய இந்த படத்தில் சிறப்பான இசையை வழங்கியுள்ளார். நான் தற்போது தெலுங்கு சினிமாவில் சைலேஷ் கொலானு இயக்கும் ஹிட் 4  படத்தில் நடித்து வருகிறேன். இயக்குனர் கல்யாணுடன் ஒரு படத்தில் பணியாற்றி வருகிறேன் என கார்த்தி தெரிவித்தார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.