தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது தவெக, ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் குடியரசு தலைவர் ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். இதில் மற்ற கட்சிகள் தவெக கூட்டணியில் இணைந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தது.
அதே நேரம் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மேலும் முதலமைச்சர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால் ஒட்டுமொத்தமாக 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகள் தேர்தல் வழக்கு இருப்பதால் இந்த தொகுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து மீதமுள்ள 2 தொகுதிகளான தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவும், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் களம் இறங்கியுள்ளது. இதில் முதல் ஆளாக திமுக இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதிமுகவும் விருப்ப மனு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதே நேரம் தவெகவும் வேட்பாளர்களை நாளைய தினம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கவுள்ளது. அதே நேரம் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை என்ன என்பது கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வரை தவெக கூட்டணியில் இணையாத கம்யூனிஸ்ட் கட்சிகள், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தவெகவிற்கு ஆதரவு அளிக்காமல் மக்கள் தங்கள் விருப்பப்படி வாக்களியுங்கள் என்ற அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிக்கமாட்டார்கள் என்ற கேள்விக்கு பதிலாக, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இரண்டு வார காலத்திற்குள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததை கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.
குதிரை பேரம் எனவும் கடுமையாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே தற்போது இந்த 2 தொகுதியில் போட்டியிடும் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு வந்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் விரும்பவில்லையென கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தவெக வேட்பாளர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்க மாட்டார்கள் என கம்யூனிஸ்ட் கட்சி வட்டார தகவலாக உள்ளது.