MK Stalin On CM Vijay: யார் என்ன சொன்னாலும் வரலாற்றை மாற்ற முடியாது என மிசா தொடர்பான முதலமைச்சரின் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டாலும், மிசா தொடர்பான வழக்குகளில் அவர் கைது செய்யப்படவில்லை என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசினார். 50 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வரும் போலி பிம்பங்கள் உடைத்தெறியப்படும் எனவும் எச்சரித்து இருந்தார். இத்தகைய பேச்சுகளால் ஸ்டாலினின் தியாகத்தை முதலமைச்சர் கொச்சைப்படுத்தி விட்டதாக கண்டனம் தெரிவித்து, நாளை மறுநாள் ஆர்பாட்டத்தையும் திமுக அறிவித்துள்ளது. இந்நிலையில், ”வீட்டில் என்னை சந்தித்தபோது சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?” என மிசா தொடர்பான அவரது பேச்சு குறித்து கேள்வி எழுப்பி திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? pic.twitter.com/kzpwXi14L8
— M.K.Stalin (@mkstalin) September 10, 2026
மிசா காலத்தில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சட்டமன்றத்தில் நடந்த சில சர்ச்சைகள் மக்களுக்கு கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன. யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது. முதலமைச்சர் விஜய் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். மிசா கைதிகளை காவலர்கள் தாக்கியபோது எனது தாடை உடைந்தது, அந்த தழும்பு இப்போதும் உள்ளது. ஆதாரங்கள் வேண்டுமானால் சட்டமன்றத்திலேயே தேடி பாருங்கள்.
விஜய் கையை வைத்து தாடையை காட்டியது சரிதான். சட்டமன்றத்திற்கு ஒரு மாண்பும் மரியாதையும் உள்ளது. முதலமைச்சருக்கு உரிய கண்ணியத்துடன் வார்த்தைகளும் உடல்மொழிகளும் இருக்க வேண்டும். உண்மை ஊரை தாண்டுவதற்குள் பொய் உலகை சுற்றி விடும் என்ற பழமொழி தான் நடக்கிறது. ரீல்ஸ்போட்டு ஒரு தலைமுறையை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியல் பழிவாங்குதலுக்காகவே அமலாக்கத்துறை வழக்குகளை பதிவு செய்துள்ளது. அரசியலுக்காக கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கூறிய பொய் குற்றச்சாட்டை விஜயும் கூறுகிறார். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவே அமலாக்கத்துறை வழக்குகளை பதிவு செய்துள்ளது. உங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ்காரர்கள் மீதும் அமலாக்கத்துறைவழக்குகள் உள்ளன.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் வீட்டிற்கு வந்தபோது, பரப்புரையின் போது அதிகமாக விமர்சித்து விட்டேன் என மன்னிப்பு கோரியதை மறந்துவிட்டீர்களா? அதை நான் மனதில் வைத்துக்கொள்ளவில்லை. அப்போதும் யாரை பற்றி பேசும்போதும் கண்ணியத்துடன் பேசுங்கள் என ஆலோசனை கூறினேன். அதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல. ஆட்சி நிர்வாகத்தை சினிமா ஷுட்டிங் போல நடத்துகிறீர்கள். தினந்தோறும் திருட்டு, கொலை, கொள்ளை என சட்ட ஒழுங்கு படுகுழியில் கிடக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் அந்தர் பல்டி அடித்துள்ளீர்கள். எது நிர்வாகத்திறன் வாய்ந்த அரசு, நிர்வாக திறன் இல்லாத அரசு எது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாடு மக்களின் வளர்ச்சிக்காக சண்டை செய்வோம்” என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.