“மக்கள் நலக் கூட்டணியைவிட மோசமாகும்!” - தவெக கூட்டணி குறித்து ஜவாஹிருல்லா பகீர் கணிப்பு
சிவரஞ்சித் September 10, 2026 06:14 PM

விழுப்புரம் ஒரு நாடகம் போல் கூட்டணி அமைத்துள்ளனர். இந்த கூட்டணி நீண்ட காலம் நிலைக்காது. மக்கள் நல கூட்டணியைவிட மோசமான நிலைக்கு இந்த கூட்டணி போகும். சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி முதல்வர் விஜய் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். விழுப்புரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

விழுப்புரத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்.,

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அரசாங்கத்தின் கஜானா காலி எனக்கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு புதிய தலைமை செயலகம் ஒன்று பட்டினப்பாக்கத்தில் கட்டப்படும் என அறிவித்துள்ளனர். இத்திட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய திட்டம். இந்தத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 

சட்டமன்றத்தில் கடைசி இரண்டு நாட்கள் மிக மோசமான, இதுவரை சட்டமன்றம் காணாத அளவிற்கு ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே உடல் மொழியில் முன்னாள் முதல்வர் முக.ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு காழ்ப்புணர்ச்சியோடு விஜய்யின் பரப்புரையாக இருந்தது. நான்காம் தர பேச்சாளர்கள் போல் முதல்வர் சட்டமன்றத்தில் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தற்போதைய முதல்வர் விஜய் உடல்ரீதியான சைகை காட்டி முன்னாள் முதல்வர், பிரதான எதிர்க்கட்சியின் தலைவரை கொச்சைப்படுத்துவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. தன்னுடைய செய்கைக்காக முன்னர் எப்படி முக.ஸ்டாலினை சந்தித்தபோது சாரி கேட்டாரோ, அதுபோல் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைக்கூட்டி தன்னுடைய உரைக்கு ஐயம் சாரி என விஜய் சொல்வதுதான் பிராயச்சித்தமாக அமையும். 

இடைத்தேர்தலுக்கு ஆதரவு முக.ஸ்டாலின் என்னை தொடர்பு கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் ஆதரவை கேட்டு கோரிக்கை வைத்துள்ளார். அதன் அடிப்படையில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி பரப்புரையில் ஈடுபடும். இதுவரை காழ்ப்புணர்ச்சியோடு, மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வகுத்து நல்லாட்சி நடத்துவதற்கு பதிலாக பிரதான எதிர்க்கட்சியும், மற்றவர்களையும் வஞ்சிக்கக்கூடிய ஆட்சியை நடத்தும் தவெக-விற்கு நல்லதொரு பாடத்தை கற்பிக்கும் வகையில் இந்த இரண்டு தொகுதி வாக்காளர்கள் திமுகவின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

தமிழ்நாட்டில் மறைமுகமாக பாஜக ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் புதிய கூட்டணியின் கூட்டத்தில் பங்கு கொள்ளவில்லை. தவெக அரசு செய்யக்கூடிய மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு இணக்கமாக இருக்க முடியாது என கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. திருமாவளவனும் முதல்வர் உரைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு நாடகம் போல் இந்த கூட்டணி அமைத்துள்ளனர். இந்த கூட்டணி நீண்ட காலம் நிலைக்காது. மக்கள் நல கூட்டணி என்பது ஒரு கொள்கை கோட்பாட்டோடு உருவாக்கப்பட்டது ஆனால் அதுவும் நீடித்து நிலைக்கவில்லை அதைவிட மோசமான நிலைக்கு இந்த கூட்டணி போகும். 

சட்டமன்றத்தின் மரபுகளை பின்பற்றாதவர்கள். முதல்வர், அமைச்சர்கள் எப்படி செயல்பட வேண்டும் என காலம் காலமாக பின்பற்றப்பட்ட மரபுகளை எல்லாம் மீறியவர்கள், இப்படியான வெளிநாட்டு பயணங்கள் குறித்து கமுக்கமாக இருப்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, அமித்ஷாவை மேற்கோள்காட்டி பேசுகிறார். உடனடியாக அமைச்சர் ஒருவர் எழுந்து அமித்ஷா தொடர்பான சொற்றொடர் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என கூறுகிறார். விசிக இப்போது கூட்டணியில் இருக்கலாம், இன்னும் எத்தனை நாளைக்கு இதையெல்லாம் சகித்துக்கொண்டு இருப்பார்கள் என்பது கேள்விக்குறி. 

மலேசியா, சிங்கபூர், இலங்கை நாடாளுமன்றங்களுக்கு சென்று இருக்கிறேன் அங்குள்ள தமிழர்கள் ஆங்கில கலப்பு இல்லாமல் தமிழில் பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் எந்த கூச்சமும் இல்லாமல், வேண்டுமென்றே ஆங்கில வார்த்தைகளை முதல்வர், அமைச்சர்கள், சில எதிர்க்கட்சியினர் பேசுவது தமிழ்நாட்டில் தமிழ் வாழ்கிறதா, அல்லது விழுந்து வருகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. இதனை வெளிநாடு வாழ் தமிழர்கள் என்னிடம் வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டுள்ளனர் என தெரிவித்தார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.