இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக சரேகமா இந்தியா நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே பதிப்புரிமை தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி இளையராஜா செயல்பட்டதாக சரேகமா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இளையராஜா இசையமைத்த திரைப்படப் பாடல்களின் பதிப்புரிமை தொடர்பாக சரேகமா நிறுவனத்துக்கும் அவருக்கும் இடையே நீண்டகாலமாக சட்டப் பிரச்னை இருந்து வருகிறது. பல திரைப்படங்களின் பாடல்களுக்கான ஒலி பதிவுகள் மற்றும் இசை, பாடல் உள்ளிட்ட படைப்புகளின் உரிமை தங்களிடம் இருப்பதாக சரேகமா தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கில், சரேகமா நிறுவனத்தின் பதிப்புரிமைக்கு உட்பட்ட பாடல்களை இளையராஜா பயன்படுத்தவோ, பிறருக்கு உரிமம் வழங்கவோ கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனிடையே, அந்த உத்தரவு அமலில் இருந்தபோதும், சரேகமா நிறுவனத்துக்கு உரிமை உள்ள பாடல்களை இளையராஜா தொடர்ந்து பயன்படுத்தியதாகவும், அவற்றின் உரிமையை தன்னுடையதாகக் கூறியதாகவும் அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனூப் ஜெய்ராம் பம்பானி, இளையராஜாவிடம் பதில் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்துள்ளார். சரேகமா தரப்பில், நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறப்படும் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. முன்னதாக, ‘என் இனிய பொன் நிலவே’ உள்ளிட்ட பாடல்களின் பதிப்புரிமை தொடர்பான வழக்கிலும் இளையராஜாவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய இளையராஜாவின் மனுவும் மே மாதம் நிராகரிக்கப்பட்டது.