Vijay TV On Vijay Sethupathi: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி வெளிப்படுத்திய கருத்துக்கு, தவெகவினர் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வருட சட்டமன்ற நிகழ்வுகள் குறித்த விவாதம் சமூகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் அடிப்படையிலேயே போட்டியாளர்களுக்காக ஒரு டாஸ்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் பங்கேற்பாளர்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை கடந்த வார இறுதி எபிசோடில் விஜய் சேதுபதி பேசினார். அப்போது, ”தலைவர் பதவி என்றால் என்ன என்பதே தெரியாமல்? வாக்குறுதிகளை அள்ளிக்கொடுப்பது, எதிரணி மேல் பழிபோடுவது” என்பது போன்ற கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் அந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியானது அரசியல் சர்ச்சையாக வெடித்தது.
விஜய் சேதுபதியின் கருத்துகள் முதலமைச்சர் விஜயை விமர்சிப்பதை போன்று இருக்கிறது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வேகமாக சமூக வலைதளங்களில் பரப்பினர். அதேநேரம், இந்த கருத்துகளுக்கு தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி தொடங்கும்போதே, ”ஸ்க்ரிப்ட் இருந்தால் இந்த மேடையில் நின்று இப்படியே தேர்தல் பரப்புரை மேற்கொள்வேன்” என பேசியதும் தவெகவினரை சீண்டும் விதமாக இருப்பதாக அதிருப்தி தெரிவித்து இருந்தார். பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ஒரு கட்சிக்கு எதிராக உள்நோக்கத்துடன் கருத்துகளை வெளியிடுவது ஏற்புடையதல்ல. இதற்காக தொகுப்பாளர் விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்பதோடு, அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் விஜய் தொலைக்காட்சியும் மன்னிப்பு கோர வேண்டும் என தவெகவினர் வலியுறுத்தி இருந்தனர். கடுமையான கண்டன மற்றும் விமர்சன பதிவுகளையும் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பிக் பாஸ் தமிழ் சீசன் 10 என்பது, அதற்கென நிறுவப்பட்ட வடிவம், தீம்கள் மற்றும் விளையாட்டுச் சூழலின் கட்டமைப்பிற்குள் வழங்கப்படும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். இதில் இடம்பெறும் சூழ்நிலைகள், உரையாடல்கள், வெளிப்பாடுகள் மற்றும் கலந்துரையாடல்கள் ஆகியவை அதன் வளர்ந்து வரும் கதைக்களத்தின் ஒரு பகுதியாகும். அவற்றை நிகழ்ச்சியில் நிகழும் சூழலிலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
நிகழ்ச்சியில் உள்ள எந்தவொரு குறிப்போ அல்லது வெளிப்பாடோ, நிகழ்ச்சியின் சூழலுக்கு வெளியே உள்ள எந்தவொரு நபர், அமைப்பு, நிறுவனம், சித்தாந்தம் அல்லது சூழ்நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ, அங்கீகரிப்பதாகவோ அல்லது கருத்துத் தெரிவிப்பதாகவோ கருதப்படக்கூடாது. நிகழ்ச்சி மற்றும் அதன் நோக்கம் கொண்ட பொழுதுபோக்குச் சூழலுக்கு அப்பாற்பட்ட எந்தவொரு விளக்கமோ அல்லது தொடர்போ, உள்நோக்கம் கொண்டதாகவோ அல்லது அங்கீகரிக்கப்படுவதாகவோ இல்லை” என விஜய் டிவி விளக்கமளித்துள்ளது.