கார்கில் போர் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக விஜய் நிவாஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக கார்கில் சென்ற பிரதமர் மோடி அங்கு மறைந்த வீரர்களின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து லடாக்கில் புதிதாக கட்டப்பட உள்ள ஷின்குன் லே சுரங்கப்பாதைக்கான பணிகளையும் மோடி தொடங்கிவைக்கிறார். சுமார் 4.1 கிலோமீட்டர் தூரத்தில் இரட்டை குழாய் சுரங்கப்பாதையாக இது அமைக்கப்பட உள்ளது. நிலப்பரப்பில் இருந்து 15 ஆயிரத்து 800 அடி உயரத்தில் கட்டப்படும் இந்த சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்தால், உலகின் மிக உயரத்தில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை என்கிற பெருமையை பெறும்.
இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டால், பாதுகாப்பு படையினர் ராணுவ உபகரனங்களை கொண்டு செல்ல பெரும் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி லடாக்கின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த சுரங்கப் பாதை மிகவும் பயனுள்ளதாக அமையும் என கூறப்படுகிறது.
இந்த சுரங்கப்பாதை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லாஹவுல் பள்ளத்தாக்கையும், லடாக்கில் உள்ள ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கையும் இணைக்கும் என கூறப்படுகிறது.