மதுரை விடுதி தீ விபத்து - உரிமையாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.!
Seithipunal Tamil September 13, 2024 09:48 AM

மதுரை மாவட்டத்தில் கட்ராபாளையம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதியில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததையடுத்து மூன்று பெண்கள் பலத்த காயமடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்த விபத்து நடந்த இடத்தை ஆட்சியர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விடுதிக் கட்டடம் முறையான அனுமதி பெறாமலும் பாதுகாப்பு வசதிகள் இல்லாமலும் செயல்பட்டது என்றுக் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட விசாகா பெண்கள் விடுதிக் கட்டடத்தை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தத் தீ விபத்து தொடர்பாக விடுதியை நடத்தி வந்த இன்பா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.