திருப்பத்தூர்: வேட்டைக்குச் சென்றபோது விபரீதம்; தந்தை, மகன் உட்பட மூவர் பலி
Vikatan September 23, 2024 12:48 AM

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள சின்ன மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரம் (40). இவரின் மகன் லோகேஷ் (14). இந்தச் சிறுவன் 9-ம் வகுப்புப் படித்து வந்தான். தந்தை, மகன் இருவரும் அடிக்கடி இரவு நேரங்களில் காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகச் செல்வார்களாம். இதற்காக உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியையும் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (செப். 21) இரவும் வேட்டையாடுவதற்காக ஏலகிரி மலை அடிவாரப் பகுதிக்குப் புறப்பட்டனர். இவர்களுடன் பெருமாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த உறவினர் கரிபிரான் (65) என்பவரும் சென்றுள்ளார். நள்ளிரவில் பெருமாப்பட்டு கிராமத்திலுள்ள காளியம்மன் கோயில் வட்டம் மலையடிவாரம் வழியாக நடந்து சென்றுள்ளனர்.

சம்பவ இடம்

அப்போது, மலையடிவாரத்தை ஒட்டிய விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதைத் தடுக்கும் விதமாக விவசாயிகள் சிலர் சட்டவிரோதமாக மின்வேலியை அமைத்துள்ளனர். வெளிச்சம் இல்லாத பகுதி என்பதால் 3 பேரின் கால்களும் மின்வேலியில் சிக்கின. மின்சாரம் பாய்ந்தபோது, அதிலிருந்து தப்பிக்க முடியாமல் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து மூவரும் உயிரிழந்தனர்.

இன்று காலை 3 பேரின் சடலங்களையும் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி, குரிசிலாப்பட்டு போலீஸாருக்குத் தெரியப்படுத்தினர். போலீஸார் விரைந்து சென்று பார்த்தபோது, சடலங்களுக்கு அருகில் நாட்டுத் துப்பாக்கியும் கிடந்தது. இதையடுத்து, சடலங்களை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், நாட்டுத் துப்பாக்கியையும் கைப்பற்றினர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நபரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.