அடிக்கடி வாய்ப்புண் பிரச்னை வருகிறதா ? இந்த காயை உணவில் சேர்த்து வந்தால் போதும்..!
Newstm Tamil October 19, 2024 01:48 PM

மருத்துவ குணங்கள் நிறைந்த சுண்டைக்காய், குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்குகிறது. குழந்தையிலேயே சுண்டைக்காயை உணவில் சேர்த்து, சாப்பிட பழக்க வேண்டும்.

சுண்டைக்காயை மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்படும். மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாகிறது.

காய்ச்சல் நேரத்தில், சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிப்பதுடன், காயங்களையும், புண்களையும் ஆற வைக்கிறது. இதுதவிர, வாயுப் பிடிப்பு பிரச்னையையும் தீர்க்கிறது. புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டு வலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய், சிறந்த மருந்து.

ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புச் சளி, காசநோய் கோளாறு உள்ளவர்கள், தினமும், 20 சுண்டை வற்றலை சிறிது நல்லெண்ணையில் வறுத்து சாப்பிட்டு வந்தால், நோய் கட்டுப்படும்.

நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுப்பதுடன், பார்வைத் திறன் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கவும் செய்கிறது.

சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது, சுண்டைக்காய். கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகிறது. இதில் உள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதையும் தடுக்கிறது.

பிரசவமான பெண்களுக்கு, பத்திய சாப்பாட்டின்போது கொடுக்கும், 'அங்காய பொடி'யில் முக்கியமானதாக, சுண்டைக்காய் இடம்பெறும்.

நோய் எதிர்ப்பு சக்தி: சுண்டைக்காயின் முக்கியமான நன்மைகளில் ஒன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது. நோஞ்சனாக இருக்கும் குழந்தைகளுக்கும் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வரும் நபர்களுக்கும் சுண்டக்காயை சமையல் செய்து கொடுத்து உண்ண வைத்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை அடிக்கடி உண்டு வருவதால் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

எலும்பு ஆரோக்கியம்: சுண்டைக்காயில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதனால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வயதான காலத்தில் ஏற்படும் மூட்டு வலி. கால் வலி போன்ற பிரச்னைகளை சரி செய்யும். அடிக்கடி சுண்டைக்காய் உணவில் சேர்த்து வந்தால் எலும்புகள் உறுதியாகும்.

ஊட்டச்சத்துக்கள்: இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ மற்றும் கால்சியம், இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. அதனால் சிறந்த கண் பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி, பளபளப்பான சருமம் போன்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

செரிமான ஆரோக்கியம்: செரிமானத்திற்கு மிகவும் உகந்தது சுண்டைக்காய். இது இரைப்பை, குடல் பிரச்னைகளை தீர்க்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதனால் குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

இரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு: நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது இந்தக் காய். இதன் கசப்பு சுவை இரத்தத்தில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாடாக வைக்கிறது. மேலும், இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது. குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடையை நன்கு பராமரிக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம்: இதில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் உடலில் அழுத்தம் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கிறது. மேலும், இது மன நிலையை மேம்படுத்தும் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. மனச்சோர்வை போக்குகிறது. நல்ல நினைவாற்றலையும் தருகிறது.

வாய்ப்புண் தடுப்பு: சிலருக்கு அடிக்கடி வாய்ப்புண் பிரச்னை ஏற்படும். அவர்கள் சுண்டைக்காயை உணவில் சேர்த்து வந்தால் வாய்ப்புண் சரியாகும். சுண்டைக்காய் வாய்ப் புண்ணைத் தடுக்கிறது மற்றும் சொத்தை பல்லை உருவாவதைத் தடுக்கிறது. இது குழந்தைகள் முதல் வயதானவர்கள் சாப்பிட ஏற்றது. சுண்டைக்காயை பொறியலாக கூட்டாக அல்லது குழம்பு வைத்தும் உண்ணலாம்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.