Commonwealth Games: நீக்கப்பட்ட பிரபல விளையாட்டுகள்... பதக்க வாய்ப்புகளை இழக்கும் இந்தியா?
Vikatan October 22, 2024 10:48 PM
காமென்வெல்த் 2026 தொடரிலிருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகள் நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் மற்ற நாடுகளை விட இந்தியாவே அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
கிரிக்கெட் போட்டி

2022 ஆம் ஆண்டின் காமென்வெல்த் போட்டிகள் பிர்மிங்காம் நகரில் நடந்திருந்தது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான காமென்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடக்கவிருக்கிறது. காமென்வெல்த் போட்டியின் நிர்வாகக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'தடகளம், பாரா - தடகளம், பாக்சிங், பவுல்ஸ், பாரா -பவுல்ஸ், நீச்சல், பாரா - நீச்சல், ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ், டிராக் சைக்கிளிங், பாரா டிராக் சைக்கிளிங், நெட் பால், பளுதூக்குதல், பாரா பளுதூக்குதல், ஜூடோ, 3×3 கூடைப்பந்து, 3×3 வீல் சேர் கூடைப்பந்து ஆகிய போட்டிகள் வரவிருக்கும் காமென்வெல்த் தொடரில் இடம்பெற்றிருக்கும்.இவற்றில் 74 நாடுகளை சேர்ந்த 3000 க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கவிருக்கின்றனர்.' எனக் கூறியிருக்கின்றனர்.

இதன்மூலம் பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், துப்பாக்கிச்சுடுதல், மல்யுத்தம், ஹாக்கி, ஸ்குவாஷ், கிரிக்கெட் போன்ற போட்டிகள் வரவிருக்கும் காமென்வெல்த் தொடரில் இடம்பெறாது என்பது உறுதியாகியிருக்கிறது. பொருளாதாரரீதியான நெருக்கடிகளை குறைப்பதற்காகவே சில விளையாட்டுகளை நீக்கியிருப்பதாக சொல்கிறார்கள்.

1966 லிருந்தே காமென்வெல்த் தொடரில் பேட்மிண்டன் இடம்பெற்று வருகிறது. 1998 லிருந்து ஸ்குவாஷூம் ஹாக்கியும் இடம்பெற்று வருகிறது. இந்த விளையாட்டுகளெல்லாம் நீக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்குதான் பெருத்த பின்னடைவை கொடுத்திருக்கிறது.

Indian Hockey Team | இந்திய ஹாக்கி அணி

2022 காமென்வெல்த் தொடரில் இந்திய அணி 61 பதக்கங்களை வென்றிருந்தது. அதில் மல்யுத்தத்தில் 12 டேபிள் டென்னிஸில் 7 பேட்மிண்டனில் 6 ஹாக்கி மற்றும் ஸ்குவாஷில் தலா 2 கிரிக்கெட்டில் 1 என பெரும்பாலான பதக்கங்களை இப்போது நீக்கப்பட்டிருக்கும் விளையாட்டுகளிலிருந்துதான் வென்றிருக்கிறது. இந்தியா சிறப்பாக ஆடும் போட்டிகள் நீக்கப்பட்டிருப்பதால் இது இந்தியாவுக்கான பின்னடைவாகாவே பார்க்கப்படுகிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.