மாநாட்டு பணியில் ஈடுபட்டு வந்த தவெக நிர்வாகி மாரடைப்பால் உயிரிழப்பு.. தலைவர் விஜய் இரங்கல்
A1TamilNews October 22, 2024 11:48 PM

புதுச்சேரி தமிழக வெற்றிக்கழக மாநிலச் செயலர் சரவணன் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கி வைத்தார். அவர் வரும் 2026-ம் ஆண்டு நடக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சிக்கான கொடியையும் கொடி பாடலையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் வருகிற 27-ம் தேதி பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விஜய்யின் கட்சி மாநாட்டு பணியில் ஈடுபட்டு வீடு திரும்பிய புதுச்சேரி தமிழக வெற்றிக்கழக மாநிலச் செயலர் சரவணன் (47) நேற்று திடீரென உயிரிழந்தார். புதுச்சேரி சித்தன்குடியைச் சேர்ந்தவர் சரவணன் (47). இவருக்கு மனைவி தேவி மற்றும் மகன் உள்ளனர். கல்லூரியில் படிக்கும் காலம் தொட்டே நடிகர் விஜயின் தீவிர ரசிகரான சரவணன் ரசிகர் மன்ற முன்னோடியாக இருந்து வந்துள்ளார். தற்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில், அதன் புதுவை மாநிலச் செயலாளராகவும், அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு மிக நெருக்கமானவராக திகழ்ந்தார். 

வரும் 27-ம் தேதி அன்று விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் மாநாட்டு வேலைகளில் அவர் தீவிர கவனம் செலுத்தி வந்தார். இந்த சூழலில் புதுச்சேரி திரும்பிய அவருக்கு நேற்று மாலை வீட்டில் இருந்த போது லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், குடும்பத்தினர் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது கட்சி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இந்நிலையில் புதுச்சேரி மாநில நிர்வாகி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, “தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி சரவணன், திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.