பெங்களூருவில் கட்டிட விபத்து; 6 பேர் பலி... கட்டிட உரிமையாளர் மகன் உட்பட 2 பேர் கைது!
Dinamaalai October 23, 2024 07:48 PM

 

பெங்களூருவில் கனமழையால் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளரின் மகன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடிகளில் சிக்கியவர்களில் இதுவரை 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது ஆந்திராவில் கரையை கடந்தது. அதனால் பெங்களூருவில் தொடர்ந்து 3 நாட்கள் கனமழை கொட்டியது. மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில், தற்போது புயலாக வலுப்பெற்றது.

இதன் காரணமாக, நேற்று முன்தினம் அதிகாலை பெய்த கனமழை காரணமாக பெங்களூருவில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் அன்றைய தினம் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாபுசபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டிடம் கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 5 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தீயணைப்பு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து இரண்டு மீட்பு வேன்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. ஒருங்கிணைந்த முயற்சியில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அந்த கட்டிடத்தில் டைல்ஸ் வேலை ஒப்பந்தம் செய்துள்ள அகமது கூறுகையில், கட்டிடம் இடிந்து விழும் போது அதில் டைல்ஸ் தொழிலாளர்கள், கான்கிரீட் தொழிலாளர்கள், பிளம்பர்கள் என 20 தொழிலாளர்கள் இருந்துள்ளனர். கட்டிடத்தின் அடித்தளம் பலவீனமாக இருந்தது இந்த சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று அகமது குற்றம் சாட்டினார்.

ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழும் தருணம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், கட்டிடத்தில் நான்கு தளங்களுக்கு மட்டுமே அனுமதி இருந்ததாக கூறப்படும் நிலையில், கட்டுமான விதிமீறல்கள் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகரின் பல பகுதிகளில், குறிப்பாக வடக்கு பெங்களூரில், நீர்நிலைகள், பள்ளங்கள் மற்றும் போக்குவரத்து காணப்படுகிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.