விஜய் மாநாடு; பேருந்து உரிமையாளர்களை மிரட்டும் திமுக அரசு - தமிழிசை செளந்தராஜன்
சேர்மசாமி October 23, 2024 09:14 PM

பாஜக உறுப்பினர் சேர்க்கை

பாஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை படிவத்தை உறுப்பினர்களுக்கு வழங்கிய பின் கமலாலயத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் ;

தமிழ்நாட்டில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 27 லட்சம் சிறுபான்மையினர் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இந்த முறை இணைந்துள்ளார்கள். இதன் மூலம் பாஜகவை சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என சொல்ல முடியாது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. பிரதமரின் ரஷ்ய பயணம் வெற்றிப் பயணமாக மாறி உள்ளது. 2019 தேர்தலை ஒப்பிடும்போது திமுக ஏறக்குறைய 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. திமுக வாக்கு சதவீதத்தை இழந்து வருகிறார்கள்.

கூட்டணி கட்சிகள் இணக்கமாக இல்லை

திமுக எவ்வளவு தான் பூசி முழுகினாலும் திமுக கூட்டணி கட்சிகள் திமுகவோடு இணக்கமாக இல்லை. விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் திமுகவோடு இணக்கமாக இல்லை. திமுக கூட்டணி முழுமையான கூட்டணியாக இல்லை. 

பருவ மழை தொடங்கி விட்டது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சாலை கூட குண்டும் குழியும்  இல்லாமல் இல்லை. இத்தனை மழை பெய்தும் ஒரு இடத்தில் கூட நீர் சேமிப்பை தமிழக அரசு முறையாக மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் முறையான நீர் மேலாண்மை இல்லாததால் ஏரி குளங்கள் வறண்டு காணப்படுகிறது. ஆனால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கப்படுகிறது.  

பேருந்துகள் வாடகைக்கு

தீபாவளிக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு வாங்குவது கண்டிக்கத்தக்க விஷயம். அரசாங்கத்தில் எந்த துறையும் சரியாக செயல்படவில்லை. ஆனால் விளம்பரம் மட்டும் சிறப்பாக நடக்கிறது. 

திமுக கட்சியை சேர்ந்த மாணவரணி தலைவர் காமராஜரை இழிவுபடுத்துகிறார். ஆனால் இதையும் காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. உதயநிதி வந்த பிறகு திமுகவில் பொன்முடி போன்றோருக்கு சீட்டு கிடைக்குமா என்ற கேள்வி அவர்களுக்குள்ளே எழுந்துள்ளது.

பி.எஸ்.என்.எல் லோகோ மாற்றம்

காவி என்பது நாட்டில் உள்ள வண்ணம் , நமது தேசிய கொடியில் உள்ள வண்ணம் பி.எஸ்.என்.எல் லோகோவை மாற்றியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது போடப்பட்டிருக்கும் புகார் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். 

பெரியார், அண்ணா , கலைஞர் காலத்தில் தான் பெண்கள் முன்னேறினார்கள் எனும் உதயநிதியின் வார்த்தைக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் எல்லாம் குரல் கொடுப்பதற்கு முன்னாலே பெண்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ஆண்டாள் வளர்த்த தமிழ்

தமிழ்நாடு அண்ணா வளர்த்த தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ். தமிழ்நாட்டில் பெண் முன்னேற்றத்தில் பெரியாருக்கும், அண்ணாவுக்கும் இருக்கும் பங்களிப்பை விட பலரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பெண் முன்னேற்றத்திற்கு முழு பங்களிப்பையும் திமுக எடுத்துக் கொள்வதை ஒத்துக்கொள்ள மாட்டேன். 

வயநாட்டில் பாஜகவை சார்ந்த துடிப்பான பெண் போட்டியிடுகிறார், வயநாடு இயற்கை சீற்றமடைந்த போது காங்கிரஸ் கட்சி என்ன செய்தது.. கேரளாவில் மறுபடியும் வாரிசு அரசியல் நிலை நிறுத்தப்படுவது தான் பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

பேருந்து உரிமையாளர்கள் மிரட்டல்

விஜய் மாநாட்டுக்கு திமுக அரசு தொடர்ந்து பல இடையூறுகளை கொடுத்து வருகிறார்கள். தனியார் பேருந்துகள் விஜய் மாநாட்டுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக அரசாங்கமே பேருந்துகளை வாடகைக்கு வாங்குகிறதோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. விஜய் மாநாடு நடத்தும் இடத்திற்கு பல கேள்விகள் கேட்டார்கள், இப்போது மாநாட்டுக்கு வரும்  பேருந்துகளின் உரிமையாளர்களை மிரட்டுவதாக தகவல்கள் வருகிறது.

விஜயை பார்த்து தமிழக அரசு பயந்திருக்கிறது என்பதுதான் எனது கருத்து என தெரிவித்தார் .தமிழக வெற்றி கழகத்தினால் பாஜகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை எங்களது ஹீரோ பிரதமர் மோடி மட்டும்தான் என தெரிவித்தார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.