யாராவது தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் இதுவே சரியான நேரம் - ஆனந்த் சீனிவாசன்..!
Newstm Tamil October 25, 2024 12:48 PM

உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் இதுவரை இல்லாத வகையில் தங்கத்தை வாங்கி குவிக்கிறது. கடந்த காலங்களில் பொதுவாக டாலரையே உலக நாடுகள் வாங்கும். ஆனால், ரஷ்யா- உக்ரைன் மோதலுக்குப் பிறகு டாலரை பயன்படுத்த ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாகவே பல நாடுகளும் டாலரில் இருந்து விலகித் தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கி இருக்கிறது.

குறிப்பாக அமெரிக்கா உடன் நல்லுறவைக் கொண்டிராத நாடுகள் வரும் காலத்தில் இதுபோன்ற தடை தங்கள் மீது விதிக்கப்பட்டால் என்ன செய்வது என்று அஞ்சி, முதலீடுகளைத் தங்கம் பக்கம் திரும்பியுள்ளன. இதனால் ரஷ்யா, சீனா, துருக்கி ஈரான் உள்ளிட்ட நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. குறிப்பாகச் சீனா கடந்த 10 மாதங்களில் தங்கத்தை இதுவரை இல்லாத அளவுக்கு வாங்கி குவித்து வருகிறது. இந்த நாடுகள் மட்டுமின்றி இந்தியா, பிரேசில், சிங்கப்பூர் நாடுகளின் மத்திய வங்கியும் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறதாம். கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்கம் விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளதாம். இதுவே உலக நாடுகள் எந்தளவுக்குத் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது என்பதையே காட்டும் வகையில் உள்ளது.

அடுத்து அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு சார்ந்தது. அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டியை அதிகரிக்கும் போது தங்கம் விலை குறையும்.. வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை அதிகரிக்கும். அமெரிக்க மத்திய வங்கி ஏற்கனவே இனிமேல் தனது வட்டி விகிதத்தை உயர்த்த போவதில்லை என்று அறிவித்துவிட்டது. ஒரு முறை வட்டி விகிதத்தைக் குறைத்தும் விட்டது. வரும் வாதங்களில் வட்டி விகிதத்தை மேலும் குறைக்கவே வாய்ப்பு இருக்கிறது. இது நடந்தால் தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும். இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் போது, கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். அதேநேரம் வட்டி விகிதம் குறையும் போது, லாபம் பெரிதாக வராது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள் இதுவே முக்கியமான காரணமாகும்" என்கிறார்கள்.

அதேபோல சர்வதேச அளவில் நிலவும் பதற்றமும் முதலீட்டாளர்கள் தங்கம் பக்கம் வரக் காரணமாக இருக்கிறது. ரஷ்யா உக்ரைன் மோதல், இஸ்ரேல் ஹமாஸ் போர், இஸ்ரேல் ஹிஸ்புல்லா தாக்குதல், இஸ்ரேல் ஈரான் பதற்றம், இது தவிரச் சீனா- தைவான் பிரச்சினை என்று உலகில் எங்குத் திரும்பினாலும் மோதல் போக்கே நிலவி வருகிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இதுபோன்ற புவிசார் பதற்றங்கள் இருக்கும்போது, மற்ற விஷயங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயங்குவார்கள். தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி முதலீடு செய்வார்கள். இப்போதும் அதுவே தான் நடக்கிறது. இந்த மூன்று காரணங்கள் தான் தங்கம் விலை அதிகரிக்க இப்போது முக்கிய காரணங்களாக உள்ளன.

கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தங்கம் விலை இந்தளவுக்கு உயரும் நிலையில், இப்போதே உடனடியாக தங்கத்தை வாங்கலாமா.. இல்லை கொஞ்ச நாள்கள் காத்திருக்கலாமா என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் வீடியோவில், "அமெரிக்காவில் தங்கம் விலை இப்போது ஒரு அவுன்ஸ் 2748 டாலர் வரை சென்றுவிட்டது. அதாவது அமெரிக்காவில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இதுவரை அந்தளவுக்கு உயரவில்லை.. ஆனால், சில நாட்களில் இதன் எதிரொலியாக இந்தியாவிலும் நிச்சயம் தங்கம் விலை அதிகரிக்கும். ராக்கெட்டில் ஏறிய தங்கம் இப்போது சூப்பராக போய் கொண்டு இருக்கிறது.

அதேபோல 24 கேரட் தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.7965க்கு விற்கப்பட்டது. இது மிக விரைவில் ரூ.8000ஐ தாண்டிவிடும். இத்துடன் நாம் ஜிஎஸ்டி வேறு கொடுத்துத் தங்கத்தை வாங்க வேண்டும். இந்தியாவில் இப்போது பண்டிகை சீசன் மற்றும் கல்யாண சீசன் வருகிறது. எனவே, இந்தளவுக்குத் தங்கம் விலை உயர்ந்தாலும் அதை மக்கள் வாங்கவே செய்வார்கள். தங்கம் அடுத்த 2 ஆண்டுகளுக்குத் தேவை.. இரண்டு ஆண்டுகளில் வீட்டில் எதாவது திருமணம் இருக்கிறது என்றால் உடனடியாக இப்போதே தங்கத்தை வாங்கிப் போடுங்கள்.

தங்கம் விலை அதிகரிப்பதால் பல நகைக் கடை நிறுவனங்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் இன்னும் தங்கத்தை வாங்குவதாகவும் அதுவே தங்கம் விலை அதிகரிக்கக் காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். எது எப்படியாக இருந்தாலும் தங்கம் விலை உயரவே போகிறது" என்றார். அதேபோல அவர் தனது மற்றொரு முந்தைய வீடியோவில், "தங்கம் விலை தீபாவளி ராக்கெட் போல சர்னு பறக்குது. இந்த முறை தீபாவளிக்கு ராக்கெட் இல்லை தங்கம் தான். 22 கேரட் தங்கம் இப்போதே ரூ. 7300ஐ தாண்டிவிட்டது. இத்துடன் ஜிஎஸ்டி, செய்கூலி எல்லாம் சேர்த்தால் ரூ.8000ஐ நெருங்கிவிட்டது.

24 கேரட் தங்கம் ஜிஎஸ்டியை சேர்த்தால் இப்போதே ரூ. 8000ஐ தாண்டிவிட்டது. இதுவே இன்றைய தலைப்பு செய்தி.. தங்கம் விலை ரூ.8000ஐ தாண்டிவிட்டது. இன்னும் கூட தங்கம் விலை கொஞ்சம் ராக்கெட்டில் ஏறும் என்றே நினைக்கிறேன். 24 கேரட்டும் சரி, 22 கேரட் தங்கமும் சரி இன்னும் ரூ.1000 வரை உயர வாய்ப்பு இருக்கிறது. எனவே, யாராவது தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் இதுவே சரியான நேரம். இனிமேல் தங்கம் ரூ.8000க்கு கீழ் கிடைக்காது" என்றார்.
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.