இதுக்கு ஒரு எண்டே இல்லையா? ஒரே நாளில் 25 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சுதர்சன் October 25, 2024 11:14 PM

இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 25க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களில் தலா 7 விமானங்களுக்கும் ஆறு ஏர் இந்தியா விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "6E 87 (கோழிக்கோடு முதல் தம்மாம் வரை செல்லும் விமானம்), 6E 2099 (உதைபூர் முதல் டெல்லி வரை செல்லும் விமானம்), 6E 11 (டெல்லி முதல் இஸ்தான்புல் வரை செல்லும் விமானம்), 6E 58 (ஜெட்டாவிலிருந்து மும்பை செல்லும் விமானம்), 6E 17 (மும்பையிலிருந்து இஸ்தான்புல் வரை செல்லும் விமானம்), 6E 108 (ஹைதராபாத் முதல் சண்டிகர் வரை செல்லும் விமானம்) மற்றும் 6E (புனே முதல் ஜோத்பூர் வரை செல்லும் விமானம்) ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

உதய்பூரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் 6E 2099 என்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பாதுகாப்பு ஏஜென்சி வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, விமானம் புறப்படுவதற்கு முன் தனிமைப்படுத்தப்பட்டது.  நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர்" என்றார்.

கடந்த 12 நாட்களில், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 275க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பெரும்பாலான மிரட்டல்கள் சமூக ஊடகங்கள் மூலமாகவே விடுக்கப்பட்டன.  குறிப்பாக, எக்ஸ் தளத்தின் மூலம் விமானங்களுக்கு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, அது பரப்பப்பட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளை மத்திய அரசு கடிந்து கொண்டது. 

வெடிகுண்டு மிரட்டல் குறித்து புரளி கிளப்புபவர்கள் விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு எச்சரித்தார். மிரட்டல்கள் வர தொடங்கியதில் இருந்து சம்பந்தப்பட்டவர்களுடன் பல சந்திப்புகளை மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டன. விமான (பாதுகாப்பு) விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.