ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் சான்றிதழ்: தேவையான ஆவணங்கள் என்ன?
செல்வகுமார் October 25, 2024 11:14 PM

மத்திய மாநில மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்

மத்திய/மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்பிக்கும் சேவையை அஞ்சல் துறை வழங்குகிறது.

டிஜிட்டல் உயிரிவாழ் சான்றுதழ்:

ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற தங்கள் வருடாந்திர ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70/-தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

ஆவணங்கள்:

ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், PPO எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

கடந்த ஆண்டில் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம், சென்னை மண்டலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்பித்துள்ளார்கள். சென்னை மண்டலத்தில் உள்ள 2194 அஞ்சல் அலுவலகங்களில் பணிபுரியும் 4100 க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மூலம் இந்த சேவையைப் பெற முடியும்

2014 ஆம் ஆண்டில் அரசாங்கம் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை (ஜீவன் பிரமாண்)அறிமுகப்படுத்தியது. அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், Department to Pension & Pensioners welfare (DOPPW) மற்றும் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தபால்காரர் மூலம் விழிப்புணர்வு வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

10 கோடி சேமிப்பு கணக்கு:

மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் (Ministry of Communications) கீழ் செயல்படும், இந்திய அஞ்சல் துறையின் (Department of Posts) சார்பில், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) நாடு தழுவிய அளவில் செப்டம்பர் 01, 2018 அன்று துவங்கப்பட்டு, இந்த குறுகிய காலத்தில், நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள 1,36,000 அஞ்சலகங்களுக்கு வங்கி சேவைகளை விரிவுபடுத்தி, 10 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கை துவங்கியுள்ளது.

இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம்.

சிறப்பு முகாம்கள்:

மேலும் https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரி மூலம் அல்லது “Postinfo” செயலியை பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம். இந்த சேவையை வழங்க அனைத்து அஞ்சலகங்களிலும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மட்டுமன்றி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கொள்ளப்படுகிறார்கள் என அரசு தெரிவித்துள்ளது. 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.