திருட்டுப் பழி; மாணவி மீது கொடூரத் தாக்குதல் - உடற்பயிற்சி ஆசிரியர் கைது
Vikatan October 29, 2024 12:48 AM
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரின் பாகலூர் சாலையிலுள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் கடந்த 23-ம் தேதி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

இந்தப் போட்டியில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் பலரும் கலந்துகொண்டார்கள். அப்போது, ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியை வாட்ச் திருடுபோனதாகக் கூறப்படுகிறது. வாட்ச் வைக்கப்பட்ட இடத்தில் இருந்த வேறொரு பள்ளி மாணவி மீது அந்த ஆசிரியைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே மாணவியை கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார் ஆசிரியை.

மாணவி தாக்கப்படும் காட்சி

சத்தம் கேட்டு அங்கு வந்த மாணவி பயிலும் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரான தியாகராஜன் என்பவரிடமும் அந்த ஆசிரியை வாக்குவாதம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. புதிய வாட்ச் வாங்கி தந்துவிடுவதாக உடற்பயிற்சி ஆசிரியர் சொன்னபோதும், ஆசிரியை சமாதானம் ஆகாமல் கடுமையான வார்த்தைகளால் வசை பாடியதாகவும் சொல்லப்படுகிறது. ஒருக் கட்டத்தில் கோபமடைந்த உடற்பயிற்சி ஆசிரியர் தியாகராஜன், மாணவியின் தாய்க்கு போன் செய்து விவகாரத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

அத்துடன் விடாமல், வாலிபால் போட்டி நிறைவு பெற்று வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தம் பகுதிக்கு அழைத்து சென்றபோது, பொதுவெளி எனவும் பார்க்காமல் மாணவியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார் உடற்பயிற்சி ஆசிரியர் தியாகராஜன். 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் சுற்றி நிற்கும்போது, அனைவரின் முன்னிலையிலும் அந்த மாணவியின் கன்னத்தில் அறைந்து, தலையில் அடித்து, முகத்தில் கையால் ஓங்கி குத்தியுள்ளார் தியாகராஜன்.

உடற்பயிற்சி ஆசிரியர் தியாகராஜன்

வலித் தாங்க முடியாமல் மாணவி பின்னே செல்லும்போதும் விடாமல் துரத்திச் சென்று சரமாரியாகத் தாக்கி கீழே தள்ளிவிட்டிருக்கிறார் உடற்பயிற்சி ஆசிரியர் தியாகராஜன். மாணவி மீதான இந்த கொடூரத் தாக்குதல் தொடர்பான காட்சிகள், அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் தெளிவாகப் பதிவான நிலையில், இந்தச் சம்பவத்தின்போது அங்கு இருந்த ஒருவரின் மூலமாக சமூக வலைதளங்களில் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. நெஞ்சை பதற வைக்கிறது இந்த காட்சிகள். வீடியோ வைரலான நிலையில், மாணவியைத் தாக்கிய உடற்பயிற்சி ஆசிரியர் தியாகராஜன் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், தியாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். உடற்பயிற்சி ஆசிரியர் தியாகராஜன் மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் உட்பட 3 பிரிவுகளின்கீழ் பாகலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட உள்ளார் தியாகராஜன்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.