மதுரை மாநகரில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியிருந்தார்.
இது குறித்த அவரின் செய்தி குறிப்பில், "மதுரை மாநகராட்சிப் பகுதியில் அம்ருத் - குடிநீர் பணி, வடிகால், பாதாளச் சாக்கடை பணி மற்றும் சாலை பணிகள் இரண்டு முக்கிய மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால் மதுரை மக்கள் கடும் இடர்பாடுகளைச் சந்தித்தனர் . பெருமழையின் காரணமாக மதுரை மாநகர வடக்குப் பகுதியில் ஏராளமான வீடுகளுக்குள் எதிர்பாராத மழைவெள்ளம் புகுந்து எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைப் பொருட்களை இழந்துள்ளனர்.
பருவமழை காலத்து இடர்களைப் போக்க அரசு நிர்வாகம் முழுமையாகவும், ஆற்றலோடும் செயல்பட அனைத்துவித முயற்சிகளையும் உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிக அவசியம் .
மேலும் தற்போது உடைமைகளை இழந்து , பொருளாதார மற்றும் வருவாய் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் குறித்த முழுமையான கணக்கெடுப்பினை மாநில அரசு நடத்திட வேண்டும். பண்டிக்கைக் காலம் உள்ளிட்ட சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் இழப்பீடாக குறைந்தபட்சம் ரூபாய் 25,000 வழங்க வேண்டுமென தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவிதியிருந்தார்.
இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைச்சர் மூர்த்தியிடம், இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அதற்கு பதில் அளித்த அமைச்சர் மூர்த்தி, அவருடைய (மதுரை எம்பி சு.வெங்கடேசன்) நிதியிலிருந்து தர சொல்லுங்கள். மழையால் எந்த பகுதியில், எந்த மக்கள் பாதிக்கப்பட்டார்கள்? என்பது குறித்த விவரத்தை அரசுக்கு கொடுக்க சொல்லுங்கள். இது குறித்து பரிசினை செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திமுக அமைச்சர் மூர்த்திக்கும், கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு வெங்கடேசனுக்கும் இடையே மறைமுக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அமைச்சரின் இந்த பேட்டியால் வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்த மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், இல்லையென்றால் வருகின்றார் 2026 சட்டமன்ற பொது தேர்தலின் போது இது எதிரொலிக்கும் என்றும், திமுக கூட்டணி கட்சிக்கு ஆதரவாக உள்ள சில அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.