Kanguva: கங்குவா திரைப்படத்தின் எடிட்டர் திடீர் மரணம்... கலங்கும் மலையாள சினி உலகம்!
Vikatan October 30, 2024 05:48 PM

மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்ற தல்லுமாலா, உண்டா, சவுதி வெள்ளக்கா, அடியோஸ் அமிகோஸ் உள்ளிட்ட திரைப்படங்களின் எடிட்டர் நிஷாத் யூசுப்(43). நவம்பர் 14-ம் தேதி வெளியாகவிருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவாவின் பெரிய பட்ஜெட் படமான கங்குவா படத்திலும் பணியாற்றியிருக்கிறார். நடிகர் மம்முட்டியின் பசூக்கா, இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜியுடன் ஒரு படத்திலும் பணியாற்ற ஒப்பந்தமாகியிருந்தார்.

நிஷாத் யூசுப்

இந்த நிலையில், கொச்சியில் உள்ள பனம்பில்லி நகரில் உள்ள அவரது குடியிருப்பில் இன்று அதிகாலை 2 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

நிஷாத் யூசுப்பின் திடீர் மரணம் குறித்து கேரள திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFKA) இயக்குநர்கள் சங்கம் அவர்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், ``மாறும் மலையாள சினிமாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றிய திரைப்பட எடிட்டரான நிஷாத் யூசுப்பின் எதிர்பாராத மறைவு, திரைப்பட உலகம் விரைவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. நிஷாத்தின் இந்த மரணம் குறித்த செய்தி, அவரது ஆதரவாளர்களுக்கும் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

2022-ல், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படமான தல்லுமாலாவில் நிஷாத் யூசுப் வித்தியாசமான எடிட் பணிக்காக சிறந்த எடிட்டருக்கான கேரள மாநில விருதைப் பெற்றார். நிஷாத் யூசுப்புக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருப்பது குறிப்பிடதக்கது.

கங்குவா

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.