Suriya : மனம் உடைந்துவிட்டது...கங்குவா படத்தொகுப்பாளர் நிஷாத் இறப்புக்கு சூர்யா இரங்கல்
ராகேஷ் தாரா October 30, 2024 06:14 PM

கங்குவா படத்தொகுப்பாளர் நிஷாத் மரணம்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. படத்தின் ரிலீஸூக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் இப்படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யுசுஃப் உயிரிழந்துள்ள செய்தி பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே கங்குவா படத்தின் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்தது படக்குழுவுக்கு பெரும் இழப்பாக அமைந்தது. கங்குவா படத்தின் இசை வெளியீட்டில் மிலன் குறித்து அனைவரும் உருக்கமாக பேசியிருந்தார்கள். இப்படியான நிலையில் நிஷாதின் மரணம் கங்குவா படக்குழுவுக்கு பேரதிர்ச்சியாக வந்து சேர்ந்துள்ளது.

நிஷாத் யூசுஃப்

மலையாளத்தில் தல்லுமாலா, ஒன், உண்டா, சவுதி வெல்லக்கா போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள,  சூர்யா 45 படத்திலும் நிஷாத் யூசுஃப் பணியாற்ற இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மம்முட்டியின் பசூக்கா படத்திலும் எடிட்டராக பணியாற்ற இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொச்சியில் பனம்பில்லி நகரில் உள்ள அவரது குடியிருப்பில் அதிகாலை 2 மணியளவில் நிஷாத் யூசுஃப் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.  அவரது மரணத்திற்கு காரணம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. நிஷாத் யூசுஃப்பின் திடீர் மரணத்தை கேரள திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFKA) இயக்குநர்கள் சங்கம் அவர்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

சூர்யா இரங்கல்

நிஷாதின் இறப்புக்கு நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். " நிஷாத் உயிரோடு இல்லை என்பததும் என் மனம் உடைந்துபோனது. நிஷாத் நீங்கள் எப்போதும் கங்குவா படக்குழுவின் ஒரு முக்கியமான அங்கமாக இருப்பீர்கள்.நிஷாதின் நண்பர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என சூர்யா பதிவிட்டுள்ளார்

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.