திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தை கட்சி ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்தது, திமுக கூட்டணிக்குள் பூகம்பத்தை கிளப்பிய நிலையில், பின்னர் திமுகவுடன் சமரசம் செய்தது. இதற்கிடையில், தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜயின் தமிழ்நாடு வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அண்மையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், 2026 சட்டமன்ற பொது தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தால், எங்களை நம்பி கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். விஜயின் இந்த அறிவிப்பு, திமுக கூட்டணி கட்சிகளுக்கும், குறிப்பாக விடுதலை சிறுத்தை கட்சிக்கான கூட்டணி அழைப்பு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதன் காரணமாக, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கட்சியின் சில தலைவர்கள் தொடர்ந்து பல்வேறு விளக்கங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும், திமுக கூட்டணியில் இருந்து அவர்கள் வெளியேறப் போவதில்லை என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம், விஜயின் ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என்ற முடிவுக்கு வரவேற்பு அளித்துள்ளது, இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று தெரிவிக்கையில், "ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு" என்ற விஜயின் கருத்து, தமிழக வெற்றிக்காக வரவேற்கத்தக்கது. "அதிகாரத்தில் பெரிய கட்சி இருக்கும்போது, அதை சமமாக அனைவருக்கும் பகிர்ந்துகொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
மேலும், அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சி விஜயின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தற்போது, தேமுதிகவும் விஜயின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால், அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எது எப்படி ஆகினும், விஜயின் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதால், அதிமுக தலைமைக்கு நெருக்கடி உருவாகியுள்ளதை யாரும் மறுக்க முடியாது.