பெண்களே உஷார்... வீட்டில் தனியாக இருந்த பெண் குத்திக் கொலை!
Dinamaalai November 01, 2024 12:48 AM

திருப்பூர் மாவட்டத்தில் வீட்டில் தனியே இருந்த பெண் குத்திக் கொலைச் செய்யப்பட்ட நிலையில், கொலைச் செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ளது பள்ளபாளையம் கிராமம். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது திருமுருகன் நகர். இந்த பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் (வயது 50). இவரது மனைவி மாரியம்மாள் (45)  இந்த தம்பதியருக்கு 2 மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வரும் நிலையில் தம்பதியர் இருவரும் தனியே வசித்து வருகின்றனர்.

செந்தில்குமார் கட்டிட வேலை செய்து வருகிறார். தினமும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது செந்தில்குமார் வழக்கம். அது போல கடந்த அக்டோபர் 28ம் தேதி காலை வழக்கம்போல் செந்தில்குமார் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் மாரியம்மாள் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் மாரியம்மாள் தனது இளைய மகளிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் செந்தில்குமார், மாரியம்மாளை தொடர்பு கொண்டபோது, மாரியம்மாள் செல்போனை எடுக்கவில்லை. வெகு நேரமாக போன் செய்தும் மாரியம்மாள் எடுக்காததால் செந்தில்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டு பக்கத்து வீட்டு பெண்ணை செல்போனில் அழைத்து, தனது வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

பக்கத்து வீட்டு பெண் மாரியம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு மாரியம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக செந்தில்குமாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். அதன்பின் இரவு 8.30 மணியளவில் வீட்டுக்கு விரைந்து சென்ற செந்தில்குமார், மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழுதார். வீட்டில் மாரியம்மாள் தனியாக இருந்ததை அறிந்த மர்ம ஆசாமிகள் அவரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து தளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக மோப்ப நாய் ஒன்று சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர்.

போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மாரியம்மாள் ஏன் கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இதில், மர்ம ஆசாமியின் உருவம் பதிவாகியிருந்ததை கண்டுபிடித்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.